சென்னையில் கொட்டும் மழையிலும் நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்பு பேரணி!



‘தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது’ என்பதை வலியுறுத்தி அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என்று சீமான் பேசினார்.

தமிழ்நாடு நாளான நேற்று, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் இந்தி எதிர்ப்பு பேரணி சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் எதிரில் இருந்து நேற்று மாலை தொடங்கியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

கூவம் ஆற்றங்கரை வழியாக சென்ற பேரணி சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையில் நிறைவடைந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான கட்சி தொண்டர்கள் கைகளில் குடையுடன் பங்கேற்றனர்.

பின்னர் சீமான் பேசியதாவது:-
நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல, ஆனால் சொந்த மொழிக்கு உயிரானவர்கள். நாம் இந்தி மொழியை எதிர்த்து போராடவில்லை. இந்தி திணிப்பைதான் எதிர்த்து போராடுகிறோம். 400 ஆண்டுகள் கூட ஆகாத இந்தி மொழி ஒரு இரவல் மொழி. ஆனால் நம் தாய் மொழி தமிழ் இறைவன் தந்த மொழி. சிவபெருமான் தந்த தொன்மையான மொழியாகும். ‘இந்திய மொழிகளின் தொன்மையை தமிழ் மொழியில் இருந்து அறிந்து கொள்ளலாம்’ என்று பிரதமர் நரேந்திரமோடியே தெரிவித்து உள்ளார்.

பல மொழிவழி தேசிய இனங்கள் வாழும் மத்திய அரசு, தனது அதிகார வலிமையை கொண்டு நாடெங்கிலும் இந்தியை திணிக்க முற்படுகிறது. இதுபோன்ற இந்தி மொழி பூச்சாண்டி எல்லாம் வேறு எங்கேயாவது கொண்டு போய் காட்டுங்கள்.

இந்தி படித்தால் வடமாநிலத்தில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். அப்படியானால் 2 கோடி வடமாநிலத்தினர் ஏன் தமிழகத்திற்கு வந்து வேலை பார்க்கிறார்கள். உழைப்பையும், வேலையையும் நாம் தவறவிடுவதால் அவர்கள் வந்து புகுந்துவிடுகிறார்கள். இப்படியே போனால் நாம் அடிமையாகி விடுவோம்.

எனவே வடமாநிலத்தில் இருந்து இங்கு வேலைகளுக்கு வருபவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை தமிழக அரசு வழங்கக்கூடாது. எங்களுடைய அடுத்தக்கட்ட போராட்டமே தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலத்தவருக்கு வாக்குரிமை வழங்கக்கூடாது என்பதை மையமாக கொண்டுதான் இருக்கும்.

நாம் நம்முடைய இடத்தையும், தளத்தையும் ஒருபோதும் இழக்கக்கூடாது. தாய்மொழி தமிழ் மொழி சிதைக்கப்படுவதை ஒருபோதும் பார்த்துக் கொண்டு இருக்கமாட்டோம். ஒப்புக்காக போராடவில்லை, உளமார போராடுகிறோம். மொழியை காக்கும் போரும், புரட்சியும் ஒருபோதும் ஓயாது.
தமிழகத்தில் அலுவல் மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும். தொடர்பு மொழியாக வேண்டுமானால் ஆங்கிலம் இருந்துவிட்டு போகட்டும்.

தமிழ்நாடு மீண்டும் போர்க்கோலம் பூண்டு இந்தி திணிப்பை கடுமையாக எதிர்க்கும். தமிழர் நிலத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் வெடிக்கும். அந்த மொழிப்போர்க்களத்தில் முதன்மை படையாக நாம் தமிழர் கட்சி இருந்து வெற்றி காணும். வருகிற 2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை நோக்கி முன்னேறி வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments