திருவாரூர் & நாகப்பட்டினம் மாவட்டத்தில் தொடர் ரயில் மறியல் போராட்டம் திட்டவட்டமாக நடக்கும் - அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவிப்பு!


டெல்டா பகுதிகளை புறக்கணிக்கும் தென்னக ரயில்வேயை கண்டித்து நாளை முதல் அறிவிக்கப்பட்டிருந்த தொடர் ரயில் மறியல் போராட்டம் திட்டவட்டமாக நடைபெறும் என அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான ரயில்கள் குறித்த கோரிக்கைகளை தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் போது அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டும், நிறைவேற்றப்படாமலும் இருக்கின்றன. இதனால் டெல்டா பகுதியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கம், ரயில் உபயோகிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து 28ஆம் தேதி முதல் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

தென்னக ரயில்வே கண்டித்து வரும் 28ஆம் தேதி முதல் தொடர் ரயில் மறியல் போராட்டம் காரணமாக பயணிகள் தங்களுடைய பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். திருவாரூரில் நடைபெற்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ் மற்றும் திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.

கீழ தஞ்சை எனப்படும் திருவாரூர் திருத்துறைப்பூண்டி நாகப்பட்டினம் வேதாரணியம் பகுதிகளில் இயக்கப்பட்டு வந்த பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து பல முறை மத்திய ரயில்வே துறைக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனை அடுத்து வரும் 28ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் மூன்று இடங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு இடம் என 4 இடங்களில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது என நாகை நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் அறிவிக்கப்பட்டது. இதன் இரண்டாவது ஆயத்த கூட்டம் திருவாரூரில் நேற்று திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தை கட்சி காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருவாரூர் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் இதுகுறித்து பேட்டியளித்தனர். அதில் தெற்கு ரயில்வே திருவாரூர் நாகை மாவட்டங்களை புறக்கணித்து வருவதை கண்டித்து 28ஆம் தேதி மிகப்பெரிய அளவில் அனைத்துக் கட்சி விவசாய அமைப்புகள் வர்த்தக சங்கங்கள் ரயில் உபயோகிப்பாளர்கள் அமைப்பினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ரயில் மறியல் போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் எதுவும் பேசாத நிலையில், திருச்சி தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் வரும் இரண்டாம் தேதி இந்த கோரிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடத்துவதாக கோரிக்கை விடுத்தார். அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம் என தெரிவித்தார். மன்னார்குடி - கோவை இடையே இயக்கப்படும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை மன்னார்குடியில் இருந்து புறப்பட்டு திருவாரூர் வந்து பின்னர் கொரடாச்சேரி பகுதி பயணிகள் பயண்படும் வகையிலும் நீடாமங்கலத்திலேயே ரயிலை நிறுத்தி என்ஜின் மாற்றுவதால் சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது .

அதனையொட்டி திருவாரூர் வரை செம்மொழி விரைவு ரயில் சேவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம் என தெரிவித்தார். மேலும் தொன்மையான ரயில் சேவைகளான நாகூர் ஆண்டவர் விரைவு ரயில், போட் மெயில் விரைவு ரயில், கம்பன் விரைவு ரயில் போன்ற பழமையான ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதை இயக்க வலியுறுத்தியே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். தற்போது பல்வேறு வழித்தடத்தில் புதிய ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மிகப் பழமையான ரயில் சேவைகளை மத்திய அரசு நிறுத்த வேண்டிய அவசியம் என்ன என்று அவர் தெரிவித்தார்.

மேலும் இந்தத் தொடர் ரயில் மறியல் போராட்டம் காரணமாக இந்தப் பகுதிக்கு வரும் சிகிச்சைக்காக மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்யும் பயணிகள் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் எனவும் இருவரும் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ரயில்வே உயர் அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றுவதற்கு தற்போது சாத்திய கூறுகள் எதுவும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர் இதனை அடுத்து நாளை முதல் திட்டமிட்டபடி தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments