அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி 5-ந்தேதி உருவாகிறது வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு




அந்தமான் கடல் பகுதியில் வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு மழை இருக்குமா? அல்லது ஏமாற்றுமா? என்பது மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பருவமழை

வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் (நவம்பர்) முதல் மற்றும் 2-வது வாரங்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. சில இடங்களில் கனமழையும் கொட்டியது.

அதிலும் குறிப்பாக, சீர்காழியில் 120 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் 43 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதன் பின்னர், கடந்த மாதம் 3-வது வார இறுதியில் வங்க கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நிலப்பரப்பில் இருந்து சென்ற வறண்ட காற்று செய்த சதியினால், எதிர்பார்த்த மழை கிடைக்கவில்லை. கனமழை, மிதமான மழை என்று சொல்லி, கடைசியில் ஓரிரு இடங்களில் லேசான மழையை மட்டும் பெய்துவிட்டு, ஆந்திர கடலோர பகுதியில் வலுவிழந்து போனது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

அதனைத்தொடர்ந்து 10 நாட்களுக்கு பருவமழை காலத்தில் மழை பெரிய அளவில் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தற்போது அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகிற 5-ந்தேதி (திங்கட்கிழமை) உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த தாழ்வு பகுதி, இந்திய பெருங்கடல் வழியாக தமிழக பகுதியை நோக்கி 2-வது வாரத்தில் பயணிக்க வாய்ப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது.

ஆனால் இதுவும் இதற்கு முந்தைய நிகழ்வை போல ஏமாற்றிவிடுமா? அல்லது எதிர்பார்த்த மழையை கொடுக்குமா? என்ற கேள்விகளுக்கான பதிலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. ஆனால் வானிலை ஆய்வாளர்கள் கடந்த மாதத்தின் 3-வது வாரத்தில் ஏற்பட்ட நிகழ்வை போல இருக்காது என்றும், அவ்வாறு தமிழகத்துக்கு வரும்பட்சத்தில் அது மழையாக இருக்குமா? காற்றாக வீசக்கூடுமா? என்பது உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கின்றனர்.

காற்று திசை வேகமாறுபாடு

பொதுவாக வடகிழக்கு பருவமழை காலத்தின் கடைசி பகுதியில், அதாவது டிசம்பர் மாதத்தில் மூடுபனி, பனி இருக்கும். ஆனால் தற்போது டிசம்பரில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. 2016-ம் ஆண்டில் டிசம்பர் 12-ந்தேதி வர்தா புயல் சென்னைக்கு அருகே கரையை கடந்தது. அது அதி தீவிர புயலாக இருந்தது. சூறாவளி காற்றுடன் மழையும் பெய்தது. அந்த வகையில் தமிழக பகுதியை நோக்கி வரும் இந்த நிகழ்வு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (வியாழக்கிழமை) முதல் 4-ந்தேதி வரை தமிழக கடலோர, தெற்கு, உள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் 7 செ.மீ., கீழ் கோத்தகிரி எஸ்டேட், சிவகிரி, மாஞ்சோலை தலா 6 செ.மீ., பர்லியார், கீழ் கோதையாறு, அடையாமடை, நாலுமுக்கு, கருப்பாநதி அணை தலா 5 செ.மீ., கடம்பூர், பில்லூர் அணை, அழகரை எஸ்டேட், கயத்தாறு, பாபநாசம், குலசேகரப்பட்டினம், கோழிப்போர்விளை தலா 3 செ.மீ.' உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments