மின் இணைப்பை மாற்ற ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்சார வாரிய அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு
    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவர், தனது பழைய கடையில் உள்ள மின் இணைப்பை புதிய கடைக்கு மாற்றி கொடுக்க மணமேல்குடியில் உள்ள மின்சார வாரியத்தை கடந்த 2009-ம் ஆண்டு அணுகினார்.

அப்போது அங்கு வணிக ஆய்வாளராக இருந்த சண்முகம் மின் இணைப்பை மாற்றி கொடுக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இது தொடர்பாக புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்தில் கல்யாணசுந்தரம் புகார் அளித்தார். ரூ.5 ஆயிரம் லஞ்ச பணத்தை சண்முகம் வாங்கும் போது கையும், களவுமாக சிக்கிய அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

5 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டையில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். இதில் லஞ்சம் கேட்டது மற்றும் லஞ்சம் வாங்கியது தொடர்பாக 2 பிரிவுகளில் தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து சண்முகத்தை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments