சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் இருபுறமும் 11 மீ அகலத்தில் 6 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடக்கம்: நெடுஞ்சாலைத்துறை தகவல்


கிழக்கு கடற்கரை சாலை சென்னை மாநகரை மாமல்லபுரம், புதுச்சேரி, சிதம்பரம், சீர்காழி, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி வழியாக கன்னியாககுமரியினை இணைக்கும் முக்கிய சாலையாகும். 1970-ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கிழக்கு கடற்கரை சாலையினை மேம்பாடு செய்ய உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கிழக்கு கடற்கரை சாலையில் புதிதாக பாலங்கள் கட்டப்பட்டது. வயலூர் அருகில் பாலாற்றின் மீது உயர்மட்ட பாலம். மரக்காணம் அருகில் தேன்பக்கத்தில் உயர்மட்ட பாலம் 1989-ல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆசிய வங்கி உதவியுடன் ரூ.110 கோடி மதிப்பீட்டில் திருவான்மியூர் முதல் கடலூர் வரை மேம்பாடு செய்யும் பணியினை துவைக்கிவைத்தார்.

 14-01-1998 அன்று மேம்படுத்தப்பட்ட இச்சாலையினை மக்கள் பயன்பாட்டிற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கொண்டுவந்தார். இச்சாலையை பாண்டிச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சலையாக 1999-ல் தரம் உயர்த்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆவார். 2000-ல் மத்திய சாலை நிதி திட்டத்தின் கீழ் திருவான்மியூர் முதல் அக்கரை வரை நான்குவழித்தடமாக மேம்படுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து இச்சாலை அக்கரை முதல் மாமல்லபுரம் வரை நான்குவழித்தடமாக பின்னர் மேம்படுத்தப்பட்டது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உலக வங்கி உதவியுடன் நாகப்பட்டினம் முதல் துத்துக்குடி வரை 334 கீ.மீ நீளம் ரூ.532 கோடி செலவில் இருவழிசாலையாக மேம்பாடு செய்யப்பட்டது.

கிழக்கு கடற்கரைச் சாலையை திருவான்மியூர் முதல் அக்கரை வரை 10.5 கி.மீ நீளம் ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த  நில எடுப்பு பணிக்காக தமிழக அரசால்  14.11.2005 அன்று நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.  தற்பொழுது ரூ.930.00 கோடிக்கு திருத்திய  நிர்வாக ஒப்புதல் பெறப்பட உள்ளது. தமிழக முதல்வர் இச்சாலை பணியின் அவசியத்தின் கருதி விரைவாக முடிக்கும்படி அறிவுரை வழங்கியுள்ளார்.

இச்சாலையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், கல்வி நிறுவனங்கள், வணிக கட்டிடங்கள் மற்றும் அடர்ந்த  குடியிருப்பு பகுதிகள் நிறைய அமைந்துள்ளன. இதன் காரணமாக இச்சாலையில் போக்குவரத்து நெறிசல் நாள் முழுவதும் காணப்படுகிறது. எனவே, இச்சாலையினை ஆறுவழித் தடமாக அகலப்படுத்துவது இன்றியமையாததாகும்.

திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய ஆறு கிராமங்களில்  நில எடுப்பு பணி நடைபெற்று வருகிறது.  இதில் பாலவாக்கம் கிராமத்தில் இடைக்கால இழப்பீட்டுத் தொகை  வழங்கப்பட்டு நில ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகை  வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டம் சென்னை மாநகரில்  கி.மீ. 11/800-ல் திருவான்மியூரில் தொடங்கி அக்கரை வரை கி.மீ.23/200 ல் முடிகிறது. இப்பணியில் சாலையின் மையத்தில் 1.2 மீட்டர் அகலத்திற்கு மைய தடுப்புச் சுவர்,  தடுப்புச் சுவரின் இருபுறமும் 11 மீட்டர் அகலத்திற்கு மூன்று வழித்தடம்,   1.65மீட்டர் அகலத்திற்கு   பேவர் பிளாக்  தளம் மற்றும் 2 மீட்டர் அகலத்திற்கு  மழைநீர் வடிக்காலுடன் கூடிய    நடைப்பாதை  அமைக்கப்பட உள்ளது.
 
தமிழக அரசு கிழக்கு கடற்கரைச் சாலையை கி.மீ. 14/550 - 15/700 வரை முதல் கட்டமாக பாலவாக்கம் கிராமத்தில் ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு 16.12.2019 அன்று ரூ.15.85  கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இப்பணிக்கு 02.11.2020 அன்று ரூ.17.43கோடிக்கு தலைமைப் பொறியாளர், பெருநகரம் தொழில்நுட்ப ஒப்புதல்  வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிக்கான உத்தேச பணி முடிவுறும் நாள் 30.09.2023. மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையை கி.மீ. 13/615 - 14/550 வரை இரண்டாம் கட்டமாக கொட்டிவாக்கம் கிராமத்தில் ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு அரசு 15.12.2021 அன்று ரூ.17.16 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியது.

இப்பணிக்கு ரூ.18.864 கோடிக்கு தலைமைப் பொறியாளர், பெருநகரம் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டது. இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது. இப்பணிக்கான உத்தேச பணி முடிவுறும் நாள் 30.09.2023. மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையை கி.மீ. 15/700 - 22/3000 வரை மூன்றாம் கட்டமாக நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் கிராமங்களில் ஆறுவழித்தடமாக அகலப்படுத்தும் பணிக்கு அரசு 14.07.2022 அன்று ரூ.126.947 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியது.  இப்பணிக்கு ரூ.134.575 கோடிக்கு தலைமைப் பொறியாளர் (நெ), பெருநகரம் அவர்களால் தொழில்நுட்ப ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இப்பணிக்கான உத்தேச பணி முடிவுறும் நாள் 30.09.2024. தற்பொழுது ஒன்றிய அரசால் கிழக்கு கடற்கரை சாலையில் கீழ்கண்ட மேம்பாட்டுப் பணிகள் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆனையம் (NHAI) மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரை 99 கி.மீ நீள சாலையினை நான்குவழித்தடமாக மேம்படுத்தும் பணிகள் ரூ.1834 கோடியில் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி முதல் நாகப்பட்டினம் வரை 150.58 கி.மீ நீள சாலையினை நான்குவழித்தடமாக மேம்படுத்தும் பணிகள் ரூ.6845 கோடியில் மூன்று தொகுப்புகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை 440 கி.மீ நீள சாலையினை நான்குவழித்தடமாக்கும் பணிக்கு விரிவான திட்டஅறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments