ஒரே பைக்கில் மூவர் பயணம்: கிறிஸ்துமஸ் புத்தாடைக்காக புறப்பட்டவர்களுக்கு நேர்ந்த சோகம்
ராமநாதபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புத்தாடை வாங்கச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களை  சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

டிசம்பர் 25 உலகமெங்கும் கிறிஸ்துமஸ் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  இனிப்புக்களை  பரிமாறியும், தேவாலயத்திற்கு சென்று வழிபட்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை  கொண்டாட தயாராகி வருகின்றனர். 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே பனையங்கால் பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளிகள்  5 பேர், கிறிஸ்துமஸ் புத்தாடை வாங்குவதற்காக, 2 இரு சக்கர வாகனங்களில் புறப்பட்டு ராமநாதபுரம் நோக்கி சென்றனர்.  மூன்று பேர் ஒரு இருசக்கர வாகனத்திலும், மற்ற இருவர் இன்னொரு இருசக்கர வாகனத்திலும் வந்தனர்.

கீழக்கரை - திருப்புல்லாணி கிழக்கு கடற்கரை சாலை தோணி பாலம் அருகே வந்தபோது, 3 பேர் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது கர்நாடகா பதிவெண் கொண்ட  கார் ஒன்று பயங்கரமாக மோதியது. இதில் அந்த இருசக்கர வாகனத்தில் வந்த  தனிக்கோடி(24), அருண்(26) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். அதில் வந்த 3-ம் நபரான மதன்(23), உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக புத்தாடை எடுக்கச் சென்ற இருவர், விபத்தில் பலியான சம்பவம் பனையங்கால் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திருப்புல்லாணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments