50 ஆயிரம் பேருக்கு மேல் உள்ள ஊர்களுக்கு ரயில் இணைப்பு: தமிழகத்தில் 9 ஊர்களில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய அறிவுறுத்தல்






சென்னை: நாட்டில் இதுவரை ரயில் தொடர்பு இல்லாத, 50 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கு ரயில் இணைப்பு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 9 ஊர்களில் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் `கதி சக்தி'திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நாட்டில் இதுவரை ரயில் தொடர்பு இல்லாத, 50 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை கொண்ட ஊர்களுக்கு ரயில் இணைப்பு கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அதன்படி,ஆந்திரா, குஜராத், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 80 ஊர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஊர்களில் ரயில் இணைப்புக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.




அந்த வகையில், தமிழகத்தில், 

*கோவை மாவட்டம் வால்பாறை, 

*ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம், 

*சேலம் மாவட்டம் எடப்பாடி, 

*சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, 

*தேனி மாவட்டம் கம்பம், 

*திருப்பூர் மாவட்டம் தாராபுரம், 

*வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, 

*கள்ளக்குறிச்சி, 

*கிருஷ்ணகிரி 

ஆகிய ஊர்களில் ரயில் இணைப்பு கொடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இது தொடர்பான ஆய்வு மேற்கொள்ளுமாறு, ரயில்வே மண்டலங்களுக்கு மத்திய ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரூ.6,506 கோடி வருவாய்: தெற்கு ரயில்வேயில் கடந்த 8 மாதங்களில், பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்து மூலம் ரூ.6,506 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: பயணிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு, சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறோம். சரக்குகளை அதிக அளவில் கையாளும் வகையில், சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தி வருகிறோம். இதனால் வருவாய் அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை, பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.6,506 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில், பயணிகள் ரயில்கள் மூலம் ரூ.4,161 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 11.9 சதவீதம் அதிகமாகும். சரக்கு ரயில் போக்குவரத்து வாயிலாக, ரூ.2,345 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 15.49 சதவீதம் அதிகமாகும். ரயில்களில் சரக்குகளைக் கையாள்வது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments