தமிழகம் முழுவதும் அனைத்து காவல்துறை உயரதிகாரிகளுக்கும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் இனி ஒவ்வொரு வாரம் புதன்கிழமை நடத்த உத்தரவு - டிஜிபி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு



 


சென்னை : தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு பொறுப்பேற்றதில் இருந்தே அவர் தலைமையிலான போலீசார் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரவுடிகளை பிடிக்கவும் கஞ்சா விற்பனை செய்வோரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ரவுடிகளை பிடிக்கும் முயற்சியாக அக்டோபர் மாதத்தில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை, கஞ்சா விற்பனையை ஒழிக்கும் பொருட்டு ஆபரேஷன் கஞ்சா 2.0 உள்ளிட்ட ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன.

டிஜிபி சைலேந்திர பாபு
இதுமட்டுமல்லாமல் காவல் உதவி மையம், காவல் உதவி ஆப், காவலன் ஆப், ஆப்ரேஷன் மறுவாழ்வு, காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு உள்ளிட்ட பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் தமிழக மக்களிடையேயும், காவலர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தியும் வருகிறார் டிஜிபி சைலேந்திர பாபு.

காவல்துறை
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் தெரிவிக்க வரும்போது அவர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். இதனையடுத்து தமிழக காவல்நிலையங்களில் புகார் தாரர்களையும் வரவேற்க தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

பொதுமக்கள் புகார்
இந்நிலையில் தமிழக காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன. சிவில் பிரச்சினையல்லாது குற்ற சம்பவங்கள், அடி தடி வழக்குகள், இருசக்கர வாகன கொள்ளை, செல்போன் செயின் பறிப்பு போன்ற குற்றங்கள் நடக்கும் போது அதனை காவல்நிலையங்களில் புகாராக பதிவு செய்ய வந்தால் போலீசார் வழக்குப் பதிவு செய்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்கள் டிஜிபிக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

குறை தீர்ப்பு முகாம்
இந்நிலையில் வாரந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும், ஒவ்வொரு புதன் கிழமையும் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், ஐ.ஜி.க்கள் ஆகியோர், பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்த வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். 

புதன்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனு பெறவேண்டும் எனவும் , பொதுமக்களின் புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு அறிவிவுறுத்தியுள்ளார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments