புதுக்கோட்டை மாவட்ட சிங்கப்பெண்கள் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு IAS, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா IPS சந்தித்த சவால்களும் சாதனைகளும்




சில தினங்களுக்கு முன் புதுக்கோட்டையின் முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கவயல் பகுதியில் பட்டியலின மக்களுக்கான குடியிருப்பில் உள்ள குடிநீர் தொட்டியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மனித கழிவுகளை கலந்ததாக எழுந்த புகார் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த புகார் மீது விசாரிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரான கவிதா ராமுவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரான வந்திதாவும் நேரில் சென்று ஆய்வு நடத்தியபோது, “தலைமுறை தலைமுறையாக அந்த கிராமத்தில் உள்ள ஐயனார் கோயிலுக்குள் எங்களை வழிபட அனுமதிப்பதில்லை. இதுபோக இரட்டை குவளை முறையையும் கடைபிடிக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டு அப்பகுதி பட்டியலின மக்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

மக்களின் இந்த புகார்களை கேட்டறிந்த ஆட்சியர் கவிதா ராமு, அவர்களை கையோடு கோயிலுக்கு அழைத்துச் சென்று வழிபட செய்து அதிரடி காட்டினார். ஆனால் அப்போதும் பட்டியலின மக்கள் கோயிலுக்குள் வருவதை எதிர்க்கும் விதமாக பூசாரி ராஜனின் மனைவி சிங்கம்மாள் சாமியாடினார். இதனையடுத்து பூசாரி மற்றும் சிங்கம்மாள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இந்த நிகழ்வுகள் குறித்த பதிவுகள்தான் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. இதுபோக ஆட்சியர் கவிதா ராமு மற்றும் எஸ்.பி. வந்திதாவுக்கும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல தரப்பிலிருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

ஆதிதிராவிட மக்களின் உரிமையை அதிரடியாக நிலைநாட்டிய ஆட்சியர் கவிதா ராமு & எஸ்.பி. வந்திதா இதற்கு முன்பு புரிந்த சாதனைகள், சந்தித்த சவால்கள் என்னென்ன என்பதை காணலாம்:

யார் இந்த கவிதா ராமு ஐ.ஏ.எஸ்?

தமிழ்நாட்டின் மாநில ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட இயக்குநராக இருந்த கவிதா ராமு, கடந்த ஆண்டு ஜூன் 17ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தின் 41வது ஆட்சியராக பொறுப்பேற்றார். அப்போது அவருக்கு பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்த போது சிலர் சாதி அடையாளத்தை மையப்படுத்தியும் பதிவிட்டிருந்தார்கள்.

இதனையறிந்த கவிதா ராமு, இது தனது சமூக வலைதள பக்கத்திலும், “தந்தை பெரியாரின் சீர்த்திருத்த சித்தாங்களையும், பகுத்தறிவை படித்து வளர்ந்தவள் நான். பெரியாரிய அறிவுறித்தியதிலேயே முக்கியமான கொள்கையான சாதி எதிர்ப்பை என் வாழ்க்கையிலும் செயல்படுத்துவேன். ஆகவே அந்த அடையாளத்திலிருந்து விடுபட்டிருக்கும் என்னை நீங்களும் அப்படியே பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.



என்னுடைய தனித்த அடையாளமாக நடனத்தை மட்டுமே சொல்லிக்கொள்ள நினைக்கிறேன். சக மனிதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமூக நீதிக்கான பாதையில் சிறப்பான செயல்பாட்டையே அளிப்பேன். சாதிகள் இல்லாத உலகை உருவாக்க வேண்டும் என்பதே என் கருத்தாகவும் ஆசையாகவும் இருக்கிறது” என பதிவிட்டு அப்போதே தெளிவுபடுத்தியிருந்தார்.

தன்னுடைய ஐந்தாவது வயதிலிருந்தே பரதநாட்டிய கலையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த கவிதா ராமு முறையாக நடனம் பயின்று 625 நடன நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார், இதுபோக தான் கற்ற கலை மற்றவர்களுக்கும் சென்று சேர வேண்டும் என எண்ணி Lasya Kavie என்ற நடன பள்ளியையும் சென்னையில் நடத்தி வருகிறார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் தன்னுடைய தனித் திறமையை விடாமல் கடைபிடித்து வருவதோடு சமூகம் சார்ந்த கருத்துகளை வெளிப்படையாக தெரிவிப்பதையும் தவறாத கவிதா ராமு, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடிய அதிகாரியும் ஆவார்.

குறிப்பாக தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் வந்திருந்த போது மேற்கொள்ளப்பட்ட கலை நிகழ்ச்சிகளை முழு மூச்சாக ஏற்பாடு செய்தது இந்த கவிதா ராமு ஐ.ஏ.எஸ்தான். அந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு பிரதமர் மோடி வியந்துப்போய் கவிதா ராமுவை வெகுவாக பாராட்டவும் செய்திருக்கிறாராம்.

கண்டிப்பான அதிரடி ஐ.பி.எஸ் அதிகாரியான வந்திதாவின் பின்னணி!

அதிரடியான இந்திய காவல்துறை அதிகாரிகளில் ஒருவர்தான் இந்த வந்திதா ஐ.பி.எஸ். உத்தர பிரதேசத்தின் அலகாபாத்தான் இவரது சொந்த ஊர். தமிழக ஐ.பி.எஸ். கேடராக 2010ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட வந்திதா 2013ல் சிவகங்கை ஏ.எஸ்.பியாக பணியை தொடங்கி 2015ல் கரூர் எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

மக்களிடையே நல்ல பெயரை பெற்றிருந்தாலும் அதிகார வர்க்கம் செய்யும் சட்டவிரோதங்களுக்கு துணைப்போகும் காவல்துறையினரிடையே வந்திதா மீதான காட்டம் எப்போதும் இருக்கும். ஏனெனில் “இந்தியாவில் எந்த இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கொடுத்தாலும் எள்ளளவும் கவலைப்பட மாட்டேன்” என கெத்தாக நேர்மையாக பணியாற்றி வருபவர்தான் இந்த வந்திதா.

Vandita Pandey IPS Appointed As Pudukkottai New SP | Vandita Pandey IPS: அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் பெற்ற வந்திதா பாண்டே ஐபிஎஸ்.. யார் இவர்?

சிவகங்கையில் பணியாற்றிய போது போலீசார் மற்றும் வி.ஐ.பிக்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியிடம் தைரியும்கூறி, தானும் தைரியமாக குற்றவாளிகளின் பெயர்களை வாக்குமூலமாக பெற்றார். அன்று அவர் பெற்ற பட்டியலில் இருந்த பெயர்களை நீக்கச் சொல்லி வந்திதாவுக்கு உயரதிகாரிகளால் கிடைக்காத குடைச்சலே இல்லை எனலாம். இவற்றையெல்லாம் மீறு துணிந்து இறங்கி அதை சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தியவர் இந்த வந்திதா. இதனால் அவருக்கு கிடைத்த பரிசுதான் கரூர் எஸ்.பியாக பதவி உயர்வு கொடுத்து மாற்றப்பட்டது.

கரூருக்கு மாற்றப்பட்டாலும் தன்னுடைய கறாரான கண்டிப்பை வந்திதா விட்டுகொடுத்ததாக சரித்திரமே இல்லை என்பது போலவே மிகப்பெரிய சம்பவத்தை செய்திருந்தார். அதாவது, அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான நத்தம் விஸ்வநாதனின் பினாமி அன்புநாதனின் இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டின் போது சுமார் நான்கே முக்கால் கோடி ரூபாய் ரொக்கத்தை அதிரடியாக பறிமுதல் செய்தவர் இந்த வந்திதாதான். உயர் தரப்பிலிருந்து வலுவான அழுத்தம் வந்த போதும் சாட்டையை கழற்றி சுழற்றுவது போல சக்கப்போடு போட்டிருக்கிறார். அதேபோல வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்விருந்த மற்ற அரசியல் கட்சிகளின் செயல்களிலும் குறிக்கிட்டு நின்று, அவர்களின் கோபக் கணலுக்கும் ஆளாகியிருக்கிறார் வந்திதா.


இதுபோன்ற பல அடுத்தடுத்த சம்பவங்களால் வந்திதா மீது `தற்கொலைக்கு முயன்றார் - அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது’ என்றெல்லாம் வதந்திகள் காட்டுத் தீயை போல பரவின. இப்படியாக 2016 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் எத்தனை முறை அரசியல் ரீதியான பிரச்னைகளை சந்தித்திருந்தாலும் அசராமல் இருந்தவர் வந்திதா ஐ.பி.எஸ். அதன்படி 2017-18 வரை ஆவடி பெட்டாலியன், 2019-21 வரை மதுவிலக்கு அமலாக்கத்துறை, பின்னர் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி என அங்கும் இங்குமாக பந்தாடப்பட்டார்.

இதனையடுத்து மகப்பேறு விடுப்பில் இருந்த வந்திதா அண்மையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். வந்திதாவின் கணவர் வருண் குமாரும் ஐ.பி.எஸ் அதிகாரிதான். அவர் மதுரையில் பணியாற்றி வருகிறார்.

இந்த இரு பெண்களும், வளர்ந்து வரும் அடுத்த தலைமுறைக்கு தைரியப்பாதையை காட்டுவதுடன், தாங்கள் செல்லும் பாதையிலும் சிங்கநடைபோடும் சிங்கப்பெண்கள்! புதுக்கோட்டை தீண்டாமை விவகாரத்தில் இவர்கள் எடுத்த நடவடிக்கையும், அதற்கு ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையம் இவர்களை பாராட்டியதுமே சீறு கொண்ட இவர்கள் பாதையின் சமீபத்திய சாட்சிகள்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments