விழுப்புரம் அருகே தண்ணீர் தொட்டியை பராமரிக்காத ஊராட்சி செயலர் சஸ்பெண்டு: கலெக்டர் மோகன் அதிரடி




விழுப்புரம் மாவட்டத்தில் 13 யூனியன்களில் 688 ஊராட்சிகளில் 2286 உட்கிடை கிராமங்களில் 3689 பெரிய தண்ணீர் தொட்டிகள், 1872 சிறிய தண்ணீர் தொட்டிகள் உள்ளன. இந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் 2280 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த தண்ணீர் தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சரியான முறையில் பராமரித்து சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கவில்லை எனில் இன்று காலையில் சுத்தம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி தலைவர், செயலாளர்களுக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் சுற்றறிக்கை அனுப்பி உத்தரவிட்டார். மேலும், சுத்தம் செய்யப்படுகிறதா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் கலெக்டர் அறிவுறுத்தினார். எனவே, அனைத்து தண்ணீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய தேவையான பணியாளர்களை பணியமர்த்திட கலெக்டர் அறிவுறுத்தினார்.

அதன்படி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பொன்னம்பலம், கோலியனூர் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஜானகி, அனந்தலட்சுமி மற்றும் அதிகாரிகள் இன்று காலை கோலியனூர் ஊராட்சியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டு, பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். இதையடுத்து கோலியனூரை அடுத்த பாளை அகரம் ஊராட்சிக்கு சென்ற கலெக்டர், அங்குள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கான எந்த வித முகாந்திரமும் இல்லாததை கண்டு ஏமாற்றமடைந்தார்.

இதையடுத்து பாளைஅகரம் ஊராட்சி செயலர் விநாயகம் அழைத்து விசாரித்தார். அவரின் பதில் கலெக்டருக்கு திருப்தியளிக்காததால் விநாயகத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்து கலெக்டர் மோகன் உத்தரவிட்டார். தொடர்ந்து பாளைஅகரம் ஊராட்சி தலைவர் லதாவை அழைத்து வாட்டர் டேங்குகளை சுத்தம் செய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டுமென நோட்டீஸ் வழங்கினார். இதைத் தொடர்ந்து பணங்குப்பம் ஊராட்சி, தொடர்ந்தனூர் ஊராட்சிகளுக்கும் கலெக்டர் மோகன் ஆய்வு செய்தார். விழுப்புரம் கலெக்டர் மோகனின் இந்த அதிரடி நடவடிக்கை ஊராட்சி செயலர்களின் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments