ஆவுடையார்கோவில் அருகேஉணவில் விஷம் வைத்து மூதாட்டியை கொலை செய்ய முயற்சி போலீசார் விசாரணை
        ஆவுடையார்கோவில் அருகே மூதாட்டிக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 70). இவர், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர், 100 நாள் ேவலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்தார். பின்னர் அவர் சமைத்து வைத்திருந்த உணவை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென குமட்டல் எடுத்து வாந்தி எடுத்துள்ளார்.

உணவில் விஷம்...

இதுகுறித்து தகவல் அறிந்த அருகில் வயலில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்த அவரது மகன் மாரியப்பன் விரைந்து வந்து என்னம்மா வாந்தி எடுக்கிறாய் என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, சமைத்து வைத்திருந்த சாதம் மற்றும் குழம்பு, பழைய சோறு ஆகியவற்றில் விவசாயத்திற்கு பயன்படுத்த கூடிய மருந்து (விஷம்) கலந்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த மாரிமுத்துவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

விசாரணை

இதுகுறித்து அவரது மகன் மாரியப்பன் கூறுகையில், எங்கள் குடும்பத்திற்கு இந்த கிராமத்தில் எதிரிகள் நிறைய பேர் உண்டு. அவர்கள் தான் என்னிடம் மோத முடியாமல் என் தாயை கொல்வதற்காக உணவில் விஷம் வைத்துள்ளனர் என்றார். இதுகுறித்த புகாரின் பேரில், திருப்புனவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டிக்கு உணவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்றவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments