பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது
திருச்சி அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே நெசவாளர் காலனியை சேர்ந்தவர் செல்லதுரை. விவசாயி. இவரது தந்தை ராமையா கடந்த ஆண்டு இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக தேவானூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த நிலையில் தேவானூர் கிராம நிர்வாக அதிகாரி விஸ்வநாத் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் விரைவில் மாற்றித்தருகிறேன் என செல்லதுரையிடம் தெரிவித்துள்ளார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத செல்லதுரை திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார்.

கைது

அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஏற்பாட்டின்பேரில் ரசாயனம் தடவிய பணத்தை செல்லதுரை கிராம நிர்வாக அதிகாரி விஸ்வநாத்திடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரசன்ன வெங்கடேசன், பாலமுருகன், சக்திவேல் மற்றும் போலீசார் ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை மடக்கிபிடித்து கைது செய்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தா.பேட்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி விஸ்வநாத் கைது செய்யப்பட்ட சம்பவம் வருவாய்த்துறையினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments