சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார்கள், வேன் அடுத்தடுத்து மோதல்; 2 பேர் பலி பக்தர்கள் உள்பட 37 பேர் காயம்




பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள், கார்கள், வேன் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் 37 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, நடு இருங்களூர் கலிங்கப்பட்டியான் தெருவை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் டைட்டஸ் (வயது 20). இவர் தனது நண்பர்களான பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அன்னமங்கலம் தெற்கு தெருவை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராபின் (22), 17 வயதுடைய சிறுவன் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு பெரம்பலூரில் இருந்து இருங்களூருக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இவர்கள் இரவு 10.45 மணியளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் மூன்று ரோடு மேம்பாலத்தை தாண்டி சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் பின்னால் சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலாவுக்கு செல்ல வேகமாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் நிற்காமல் தடுப்புச்சுவரை தாண்டி எதிரே உள்ள சாலைக்கு சென்றது. அந்த கார் மேலும் அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும், சபரிமலை அய்யப்பன் கோவிலில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கார் மீதும் அடுத்தடுத்து மோதியது.

மேலும் நிற்காமல் அந்த கார் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் இருந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த பக்தர்கள் வேனின் முன்பக்கம் மீதும் மோதி நின்றது. இந்த விபத்தில் அந்த காரின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2 பேர் பலி

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த டைட்டசும், விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த சென்னை கொரட்டூர் சீனிவாசன் நகரை சேர்ந்த கோபிநாத்தின் இரட்டை மகன்களில் மூத்த மகன் பிரவீனும் (30) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன், ராபின், விபத்தை ஏற்படுத்திய காரில் இடிபாடுகளுக்கிடையே சிக்கிய பிரவீனின் தம்பி பிரகாஷ் (30), சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த கெவின் (28), வெங்கடேஷ் (30) ஆகிய 5 போ் படுகாயமடைந்தனர்.

பக்தர்கள் உள்பட 37 பேர் காயம்

சபரிமலையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரில் பயணம் செய்த அய்யப்ப பக்தர்களான ராஜீ மனைவி செல்வராணி (68), அவரது மகன் அருள்ராஜ் (50), அதன் டிரைவர் சென்னை ஈக்காட்டு தாங்கலை சேர்ந்த மனோகர் (43) மற்றும் மதுரையில் இருந்து வந்த காரை ஓட்டி வந்த டிரைவர் உசிலம்பட்டியை சேர்ந்த இனியசெல்வன் (33), மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு சென்ற பக்தர்களான 23 பெண்கள், 2 சிறுவர்கள், ஒரு சிறுமி, ஆண் ஒருவர், அதன் டிரைவர் என மொத்தம் 32 பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போக்குவரத்து போலீசாரும், பெரம்பலூர் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த 5 பேரையும், காயமடைந்த 32 பேர் என மொத்தம் 37 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த விபத்தினால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் மாற்றுப்பாதையில் வாகனங்களை போக செய்து, விபத்துக்குள்ளான 3 கார்கள், வேன், மோட்டார் சைக்கிளை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதனை தொடர்ந்து போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டது.

விபத்தில் படுகாயம் அடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். லேசான காயமடைந்தவர்கள் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். படுகாயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரம்பலூரில் நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments