பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக ரெயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ள பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் பெரும்பாலும் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், பிற பகுதிகளுக்கும் இரு மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த சிறப்பு ரெயில்களில் புதுக்கோட்டை வழியாக தாம்பரம்- நெல்லை-தாம்பரம், நாகர்கோவில்-தாம்பரம், கொச்சுவேலி-தாம்பரம்-கொச்சுவேலி உள்ளிட்ட சிறப்பு ரெயில்கள் பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இருக்கைகள் நிரம்பிவிட்டன. இதனால் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கையாக உள்ளது.
முன்பதிவு டிக்கெட் முடிந்தது
புதுக்கோட்டை வழியாக காரைக்குடி-சென்னை, ராமேசுவரம்- சென்னை, ராமேசுவரம்-புவனேஸ்வர், கன்னியாகுமரி-புதுச்சேரி, செங்கோட்டை- சென்னை, ராமேசுவரம்- கோவை இடையே இயக்கப்படும் வழக்கமான ரெயில்கள் ஆகும். இந்த ரெயில்களிலும் பொங்கல் பண்டிகையையொட்டி முன்பதிவு டிக்கெட் இருக்கைகள் நிரம்பிவிட்டன. புதுக்கோட்டை வழியாக கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும் என்பது பற்றி பயணிகள் மற்றும் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
அதிக ரெயில்கள் இயக்க வேண்டும்
புதுக்கோட்டை ரெயில் பயணிகள் சங்க சட்ட ஆலோசகர் சந்திரசேகரன்:- ``தீபாவளி, பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் போதுமானதாக இல்லை. இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப ரெயில் போக்குவரத்தின் வசதிகள் தேவை. அப்போது தான் ஏழை, எளிய மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் பயணம் செய்ய முடியும். பண்டிகை காலங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலே முன்பதிவாகிவிடுகின்றன. அப்படியானால் மற்ற பயணிகள் பயணிக்க ரெயில்கள் வசதி இல்லாமல் போய்விடுகிறது. எனவே கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும். புதுக்கோட்டை வழியாக தமிழகத்தில் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வசதியாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட வேண்டும். குறிப்பாக சென்னை, தென்மாவட்டங்களுக்கு அதிக ரெயில்கள் இயக்க வேண்டும்.
ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு
கறம்பக்குடியை சேர்ந்த மணிகண்டன்:- பண்டிகை காலங்களில் போதுமான, பஸ், ரெயில் வசதிகள் இன்றி பொதுமக்கள் படும் சிரமம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழகத்திற்கு ரெயில்வே திட்டங்களில் எந்த முன்னுரிமையும் கிடைப்பதில்லை. பண்டிகை காலங்களில் சிறப்பு ரெயில்களும் போதுமான அளவு இயக்கப்படுவது இல்லை. இதனால் பண்டிகையை வாய்ப்பாக பயன்படுத்தி ஆம்னி பஸ்களின் கட்டணம் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. இதனால் பலர் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லமுடியாத நிலை உருவாகிறது. எனவே தமிழ்நாட்டில் இயக்கப்படும் ரெயில்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் சிறப்பு ரெயில்களை கூடுதலாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ரெயில்வே திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படும் நிலை மாற வேண்டும்.
ரெயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
இலுப்பூர் போலம்பட்டி பொண்ணுச்சாமி:-
பண்டிகை நேரங்களில் பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதை காண முடிகிறது. அரசு பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் நிலையில், ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் பெரும்பாலான மக்கள் ரெயிலில் செல்வதற்கு விரும்புகின்றனா். ஆனால் ரெயிலில் முன்கூட்டியே முன்பதிவு செய்யப்பட்டு அனைத்து டிக்கெட்டுகளும் காலியாகி விடுகின்றன. எனவே, வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12, 13, 14, ஆகிய தேதிகளில் சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். குறிப்பாக, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து புதுக்கோட்டைக்கு கூடுதல், சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும். மேலும் பகலில் இயக்கப்படும் ரெயிலின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
ரெயில்வேக்கு அதிக வருமானம் கிடைக்கும்
அறந்தாங்கி ராஜசேகரன்:- அறந்தாங்கி மார்க்கத்தில் ரெயில்வே பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சரிவர ரெயில்கள் இயக்கப்படவில்லை. கடந்த தீபாவளி பண்டிகைக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் அறந்தாங்கி மார்க்கத்தில் இயக்கப்பட்டது. இதனால் ரெயில் உபயோகிப்பாளர்கள் பொதுமக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தது. சிறப்பு ரெயில் இயக்கப்படும் என 2 நாட்களுக்கு முன்புதான் அறிவிக்கப்பட்டது. 2 வாரங்களுக்கு முன்பே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவித்திருந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும். பண்டிகை முடிந்தும் 3 நாட்களுக்கு ரெயில் இயக்க வேண்டும். பண்டிகை காலங்களில் சிறப்பு ரெயில் இல்லாததால் பஸ்சில் கூட்டம் அலை மோதுகிறது. பஸ் கட்டணம் அதிகமாக கொடுத்து சொந்த ஊர் செல்ல வேண்டி உள்ளது. சில பேர் பஸ்சில் கூட்டமாக இருக்கும் என நினைத்து சொந்த ஊருக்கு பண்டிகை காலங்களில் செல்வதில்லை. வரும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரெயில் கூடுதலாக இயக்க வேண்டும். சிறப்பு ரெயில் இயக்கப்படும் மார்க்கத்தை இப்பவே ரெயில்வே துறை உடனே அறிவிக்க வேண்டும். அதிகமாக சிறப்பு ரெயில் பண்டிகை காலங்களில் இயக்கினால் ரெயில்வேக்கு வருமானம் கிடைக்கும். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாடி விட்டு வர சுலபமாக இருக்கும். பண்டிகை காலங்களில் பஸ் கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுகிறது. ெரயில் பயணம் என்றால் அனைவருக்கும் பணம் மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.