மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க அனுமதி ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமல்




ஏப்ரல் 1-ந் தேதி முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் இயங்குவதற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

மதுரை விமான நிலையம்

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு,, மும்பை, டெல்லி, ஐதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கும், இலங்கை, துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் விமான சேவை சீராக நடைபெற்று வருகிறது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை மட்டுமே விமான சேவை உள்ளது.. வெளிநாட்டு விமான சேவை நடைபெறும் நாட்களில் கூடுதலாக 2 மணி நேரம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் விமான சேவை இல்லாமல் இருந்தது.

இதனால், வெளிநாடுகளுக்கு செல்ல தென் மாவட்ட மக்கள் திருச்சி, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட விமான நிலையங்களை நாடிச் செல்கின்றனர்.

வலியுறுத்தல்

தென் மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து, மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்க வழிவகை செய்ய வேண்டும் என பல கட்டங்களாக வலியுறுத்தி வந்தனர்.

இதற்கு மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தற்போது அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வெளியிடப்பட்டுள்ள ெசய்திக்குறிப்பில், மதுரை, அகர்தலா, இம்பால், போபால், சூரத் ஆகிய விமான நிலையங்கள் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் 24 மணி நேர சேவை நடைபெற அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மதுரை உள்ளிட்ட 5 விமான நிலையங்களிலும் 24 மணி நேர சேவைக்கான விமான வான் போக்குவரத்து கட்டுப்பாடு (ஏர் டிராபிக் கண்ட்ரோல்) மற்றும் வலைதள தொடர்பு சேவை (கம்யூனிகேஷன் நெட்வொர்க் சர்வீஸ்) ஆகிய பிரிவுகளில் ஆட்கள் பணி நியமனம் செய்வதற்கும், விமான நிலைய பாதுகாப்பு பணியிடங்களை நிரப்புவதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

முதல் முயற்சி

இதுகுறித்து மதுரை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஏப்ரல் 1-ந்தேதி முதல் 24 மணி நேர சேவை தொடங்க அடிப்படை வசதிகள், பணியாளர்கள் நியமிக்க விமான போக்குவரத்து அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இது மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுவதற்கு கிடைத்த முதல் முயற்சியாகும். இதன் மூலம் இரவு நேரங்களிலும் அதிக அளவில் விமான சேவை நடைபெறும். குறிப்பாக பல்வேறு நாடுகளில் இருந்து மதுரைக்கு விமானங்கள் இயக்க ஒப்புதல் அளிக்கப்படும். அதன் மூலம் வெளிநாட்டு விமானங்கள் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வாய்ப்பு கிடைக்கும். இதனால் மதுரை விமான நிலையம் தமிழகத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களை காட்டிலும் மிக வேகமாக வளர்ச்சி அடையும். இது தென் மாவட்ட மக்களுக்கும், தொழில் வளர்ச்சிக்கும் மிக முக்கிய இலக்காக கருதப்படுகிறது. விமான சேவையை 24 மணி நேரமும் வழங்கும் வகையில் அதற்கான பணியாளர்கள் குறித்த விவரங்களையும், விமான நிலையத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்தும் பல்வேறு கட்டங்களாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தன்னுடைய இணையதள பக்கத்தில், மகிழ்வான செய்தி.... வரும் ஏப்ரல் 1-ந் தேதியிலிருந்து மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும் விமான நிலையமாக மாறும்.. புதிய அறிவிப்புக்கு நன்றி, என பதிவிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments