கோடியக்கரை பகுதியில் கடலில் குளித்த மாணவர் சடலமாக மீட்பு




நண்பர்களோடு பொங்கல் பண்டிைக விடுமுறையை கொண்டாட வந்த போது கோடியக்கரை பகுதியில் கடலில் குளித்த மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.

பொங்கல் பண்டிகை கொண்டாட...

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது யூசுப். இவரது மகன் முகமது பைசல் கான் (வயது 19). இவரது நண்பர்களான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் மகன் முசாமைதீன் (17), காரைக்குடி பகுதியை சேர்ந்த பைசல் ரகுமான் மகன் தஸ்லீம் (17), ஹரீஷ் (17). இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். தஸ்லீம் உள்பட 3 பேரும் பொங்கல் பண்டிகை விடுமுறையை கொண்டாடவும், மேலும் கடற்கரை பகுதியை சுற்றி பார்க்க கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள தனது நண்பரான முகமதுபைசல் கான் வீட்டிற்கு 15-ந்தேதி வந்துள்ளனர்.

தேடும் பணி

இந்நிலையில், 16-ந்தேதி மணமேல்குடி கோடியக்கரை பகுதியில் உள்ள கடலில் 4 பேரும் குளித்து கொண்டிருந்தனர். இதில் ஹரீஷ் மற்றும் தஸ்லீம் ஆகிய 2 பேரும் கடல் நீர் உள் நீரோட்டம் உள்ள பகுதியில் குளித்துள்ளனர். அப்போது திடீரென தஸ்லீமையும், ஹாீசையும் கடல் நீர் உள்ளோட்டத்தில் தண்ணீர் இழுத்துள்ளது. இதையடுத்து 2 பேரும் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். இதில் பக்கத்தில் இருந்த 2 நண்பர்களும் ஹரீசை மற்றும் காப்பாற்றினர். ஆனால் தஸ்லீமை கடல்நீர் உள்ளே இழுத்து சென்றுள்ளது. இந்நிலையில் தஸ்லீமை ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறையினர், மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவர்கள் இணைந்து படகின் மூலம் கடலில் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மாணவர் உடல் மீட்பு

இந்நிலையில் நேற்று மதியம் மீன்பிடிக்கும் வலையை கொண்டு தேடினர். அப்போது கடலில் மூழ்கிய தஸ்லீம் உடலை மீட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தஸ்லீம் உடலை பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தஸ்லீம் உடலை பார்த்த அவரது உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களையும் கண்கலங்க வைத்தது. இதுகுறித்து கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுமக்கள் ஏமாற்றம்

மேலும் கோடியக்கரை பகுதியில் காணும் பொங்கல் அன்று பொதுமக்கள் அதிகளவு கூடுவார்கள். ஆனால் நேற்று மதியம் வரை மாணவர் உடல் கிடைக்காததால் கோடியக்கரை பகுதிக்கு சுற்றுலா பணிகள் மற்றும் பொதுமக்களை போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் கோடியக்கரை பகுதிக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments