சம்பா நெல் அறுவடை பணிகள் மும்முரம் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பா நெல் சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டம் வானம் பார்த்த பூமியாக இருந்தாலும் பருவ மழையை நம்பி விவசாயம் அதிகம் நடைபெறுகிறது. இதுதவிர கிணற்று பாசனம், ஏரி, குளங்கள் பாசனம், ஆழ்குழாய் மோட்டார் பாசனத்தை நம்பி விவசாயிகள் உள்ளனர். மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, சிறுதானியங்கள் உள்ளிட்ட விவசாயம் நடைபெறுகிறது.

இந்தநிலையில் மாவட்டத்தில் சம்பா நெல் சாகுபடி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மும்முரமாக நடைபெற்றது. இதில் விவசாயிகள் பலர் சம்பா நெல் நடவு செய்தனர். சுமார் 2 லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இடையில் வடகிழக்கு பருவ மழை பொய்த்ததால் ஆவுடையார்கோவில், மணமேல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல் நடவு வீணாகி போனது. மழை இல்லாததால் நெற் பயிர்கள் காய்ந்து போயின. ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கு இருந்த நிலை இருந்தது.

அறுவடை மும்முரம்

இந்த நிலையில் மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்த ஓரளவு மழை மற்றும் பாசனத்தினால் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்தன. தற்போது பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராகி வருகிறது. புதுக்கோட்டையில் இருந்து கீரனூர், அன்னவாசல், ஆலங்குடி, அறந்தாங்கி செல்லும் சாலைகளில் சாலையோரங்களில் வயல்களில் ஆங்காங்கே அறுவடை தொடங்கி நடைபெற்று வருவதை காணமுடிகிறது.

மாவட்டத்தில் எந்திரங்கள் மூலம் சம்பா நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் வாடகை கட்டணத்தை வேளாண்மை துறை அதிகாரிகள் நிர்ணயம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு சில இடங்களில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல்லை கொள்முதல் செய்ய அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்பட்டு வருகிறது.

நெல் கொள்முதல் நிலையங்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 88 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கூடுதலாக 83 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. இதன்மூலம் 171 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவுள்ளன.

நடப்பு சம்பா பருவத்தில் சுமார் 3.40 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments