தடை செய்த வலைகளை பயன்படுத்தியதால் நடவடிக்கை: ராமேசுவரத்தில் 4 டன் மீன்கள் பறிமுதல் 97 படகுகள் மீது வழக்கு
ராமேசுவரம் பகுதியில் நேற்று கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு மீன் துறை உதவி இயக்குனர் அப்துல், கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தடை செய்யப்பட்ட வலைகள் வைத்து மீனவர்கள் படகுகள் மூலம் மீன்பிடித்து வருகிறார்களா? என்பது குறித்து ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சோதனையின்போது ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்று வந்த 97 படகுகள் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை வைத்து மீன்பிடித்தது தெரியவந்தது.

மேலும் இதில் 49 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி சீட்டு வாங்காமல் மீன் பிடிக்க சென்று வந்ததும் தெரியவந்தது. இந்த 97 படகுகள் மீதும் அபராதம் விதித்து மேல் நடவடிக்கைக்கும் மீன் துறை துணை இயக்குனருக்கு பரிந்துரைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட வலைகளை வைத்து பிடித்து வந்ததாக விசைப்படகுகளில் இருந்த 4 டன் மீன்களை மீன்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த மீன்களை ரூ.32 ஆயிரத்துக்கு வியாபாரிகளிடம் ஏலம் விட்டனர்.

கடந்த 20-ந்தேதி அன்று ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த மீனவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் முன்பு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகள் வைத்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments