அதிகாலையில் நடந்த துயர சம்பவம் துருக்கி, சிரியா நாடுகள் அதிர்ந்தன நிலநடுக்கத்துக்கு 2,300 பேர் பலி
துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள சிறிய தொழில் நகரம் காசியான்டெப். இங்கு நேற்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

10 மாகாணங்கள் குலுங்கின

உள்ளூர் நேரப்படி அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 புள்ளிகளாக பதிவானது.

மேலும் இது பூமிக்கு அடியில் 20 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

முதலில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 20 முறை கடுமையான நில அதிர்வுகள் ஏற்பட்டன.

காசியான்டெப் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்கி முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது. குறிப்பாக நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் குலுங்கின.

திரும்பும் திசையெல்லாம் கட்டிடக்குவியல்

அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து தூக்கத்தில் இருந்து விழிப்பதற்குள் கட்டிடங்கள் தரைமட்டமானதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோயின.

நிலநடுக்கத்தின்போது துருக்கியின் காசியான்டெப், கஹ்ராமன்மாராஸ், தியர்பகீர், அடானா, மாலத்யா, கிலிஸ் உள்ளிட்ட நகரங்களில் வானுயர குடியிருப்பு கட்டிடங்கள், அடுக்குமாடிகளை கொண்ட வணிக வளாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சீட்டுக்கட்டு சரிவது போல நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமாகின.

1,500-க்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு திரும்பிய திசையெல்லாம் கட்டிடக்குவியலாக காட்சி அளிக்கிறது.

மீட்பு பணிகளில் தொய்வு

மலைபோல் குவிந்துகிடக்கும் கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கும் நிலையில் அவர்களை மீட்க ஆயிரக்கணக்கான மீட்பு குழுவினர் களமிறக்கப்பட்டு, மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் அவர்களுடன் இணைந்து வெறும் கைகளிலேயே இடிபாடுகளை அகற்றி அதனுள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். துருக்கியில் இடிந்த கட்டிடங்களில் ஆஸ்பத்திரிகளும் அடங்கும். அதனால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உயர்தர சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டும் இன்றி நிலநடுக்கம் பாதித்த இடங்களில் பனிப்பொழிவு மற்றும் மழை பெய்து வருவது மீட்பு பணிகளில் தொய்வை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவிலும் பேரழிவு

இதனிடையே இந்த நிலநடுக்கம் சிரியாவிலும் கடும் பேரழிவை ஏற்படுத்தியது. துருக்கியின் எல்லையையொட்டி இருக்கும் சிரியாவின் வடக்கு பகுதிகள் நிலநடுக்கத்தால் நிலைகுலைந்தன. அங்கு கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல நகரங்கள் சின்னாபின்னமாகின.

குறிப்பாக கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள ஜாண்டரிஸ் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கனவே உள்நாட்டு போரின் போது நடந்த குண்டுவெடிப்புகளால் இடிந்த கட்டிடங்கள் உள்பட நூற்றுக்கணக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகின.

அதேபோல் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் அலெப்போ, லதாகியா, ஹமா மற்றும் டார்டஸ் ஆகிய நகரங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.

அங்கு வீதிகள் எங்கும் கட்டிட இடிபாடுகளும், மரண ஓலங்களுமே நிறைந்திருக்கின்றன. பெரும் இடிபாடுகளுக்கு நடுவில் உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடுவதற்கு மீட்புக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

2,300 பேர் பலி

இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 2,300-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கியில் மட்டும் 1,500 பேர் பலியானதாகவும், 8,500 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் சிரியாவில் அரசு படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் 430 பேரும், கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள பகுதிகளில் 380 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. மேலும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருநாடுகளிலும் மீட்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகின்றன. கட்டிட இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானோர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டு செல்லும் என அஞ்சப்படுகிறது.

மீண்டும் நிலநடுக்கம்

இதனிடையே துருக்கியில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5 புள்ளிகளாக பதிவானது. அடுத்தடுத்து தாக்கும் பயங்கர நிலநடுக்கங்களால் துருக்கி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

முன்னதாக துருக்கியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் துருக்கி, சிரியா மட்டும் இன்றி லெபனான், சைப்ரஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளிலும் கடுமையாக உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே நிலநடுக்கத்தால் பேரழிவை சந்தித்துள்ள துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ உலக நாடுகள் பலவும் முன்வந்துள்ளன. போரில் ஈடுபட்டு வரும் உக்ரைன் மற்றும் ரஷியாவும் கூட துருக்கி மற்றும் சிரியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அறிவித்துள்ன.

துருக்கியின் 10 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே பிராந்தியத்தில் கடந்த 1999-ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டபோது 18 ஆயிரம் பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி உறுதி

அந்த வகையில் நிலநடுக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “துருக்கி மக்களுடன் இந்தியா ஒற்றுமையுடன் நிற்கிறது. இந்த துயர சம்பவத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. சம்பவ இடத்துக்கு மீட்பு குழுக்கள், மருத்துவ குழுக்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் அனுப்பப்படும்” என்று குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து துருக்கிக்கு தேவையான உதவிகளை வழங்குவது தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

மீட்பு குழுக்கள் தயார் நிலை

கூட்டத்தில் துருக்கி அரசாங்கத்தின் ஒருங்கிணைப்புடன் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுக்களை நிவாரணப் பொருட்களுடன் உடனடியாக துருக்கி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சிறப்பு பயிற்சி பெற்ற மோப்ப நாய் படைகள் மற்றும் தேவையான உபகரணங்களுடன் 100 பணியாளர்களைக் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையின் 2 குழுக்கள் துருக்கிக்கு புறப்பட்ட தயாராக உள்ளன. அதேபோல் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுடன் மருத்துவ குழுக்கள் அத்தியாவசிய மருந்துகளுடன் தயார் நிலையில் உள்ளன” என்றார்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments