திருச்சி அருகே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க திரண்ட கிராம மக்கள் நிதி ஒதுக்கியும் சாலை அமைக்காததை கண்டித்து நடந்தது




திருச்சி அருகே நிதி ஒதுக்கியும் சாலை அமைக்காததை கண்டித்து ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒப்படைக்க திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தார்சாலை

திருச்சியை அடுத்த முக்கொம்பு அருகே பெருகமணி ஊராட்சியில் மீனாட்சிபுரம், பெருகமணி, பழையூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் உள்ள பழையூர் உய்யகொண்டான் வாய்க்கால் கரை பகுதியில் இருந்து ஆண்கள் படித்துறை வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கப்பட்டது.

தற்போது, அந்த சாலை நடந்து செல்வதற்கு கூட தகுதியற்றதாக உள்ளது. எனவே அந்த சாலையை புதியதாக அமைக்க கோரிஅந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கிராம சபை கூட்டத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு கொடுத்துள்ளனர். இந்த நிலையில் அந்த சாலை அமைக்க கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ரூ.27 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. அதன் பின் நிர்வாக அனுமதி கிடைக்கவிலை என கூறி கிடப்பில் போட்டதாக தெரிகிறது.

ஒப்படைக்க...

இதை கண்டித்து நேற்று மதியம் பழையூர் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலை திட்ட அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ஒப்படைக்க அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் சரவணன் கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் 15 நாட்களுக்குள் நிர்வாக அனுமதி பெற்று தார் சாலை அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments