இலங்கையில் இருந்து படகில் கடத்தல் மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்பு




இலங்கையில் இருந்து படகில் கடத்தல் மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்பு நீச்சல் வீரர்கள் உதவியுடன் அதிகாரிகள் கைப்பற்றினர் மண்டபம் கடற்பகுதியில் வீசப்பட்ட 18 கிலோ தங்க கட்டிகள் கடலில் இருந்து மீட்கப்பட்டது. நீச்சல் வீரர்கள் உதவியுடன் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

சமீபகாலமாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது.

எனவே கடத்தல்களை தடுக்க கடற்படை, கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு போலீசார், கியூ பிரிவு போலீசார், மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

தங்கம்

இருந்தாலும் கடத்தல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங்கையில் இருந்தும் கடத்தல்காரர்கள் தங்கம் உள்ளிட்டவற்றை இந்திய கடல் எல்லைக்கு கொண்டு வந்து கைமாற்றுகிறார்கள்.

அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தை நோக்கி இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்பட்டு, தங்கக்கட்டிகள் இருந்த மூட்டைைய கடலில் வீசிய தகவல் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நேற்று 2-வது நாளாக தேடுதல் வேட்டை நடத்தி, நடுக்கடலில் இருந்து 18 கிேலா தங்கத்தை மீட்டு இருப்பது அதிசயிக்க வைத்துள்ளது.

நிற்காமல் சென்ற படகு

அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு வடக்கே இருக்கும் கடல் பகுதியை பாக் ஜலசந்தி என்றும், தென்பகுதியை மன்னார் வளைகுடா எனவும் அழைக்கிறார்கள். இவை வழியாக பயணித்தால், இலங்கையின் கடல் எல்லைக்கு விரைவில் சென்றுவிடலாம்.

எனவே இந்த வழியாகத்தான் அதிக அளவிலான கடத்தல்கள் நடப்பதாக அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த நிலையில், இலங்கையில் இருந்து ஒரு படகில் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவர்களும், மண்டபம் இந்திய கடலோர காவல் படையினரும் ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் முகாமிட்டு நேற்று முன்தினம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகத்துக்கு இடமான படகுகளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது, ஒரு நாட்டுப்படகு நிற்காமல் சென்றது.

கடலில் போட்டனர்

கடலோர காவல் படையினர் எச்சரித்தும் அந்த படகு நிற்கவில்லை. எனவே ரோந்து கப்பல் மூலம் அந்த படகை விரட்டினார்கள். கப்பலில் இருந்த தொலைநோக்கி உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் கடலோர காவல் படையினர் கண்காணித்தபோது, படகில் இருந்த 3 பேர், அவசரம், அவசரமாக மூட்டையை கடலில் தூக்கிப்போட்டனர்.

அவர்கள் கடலில் வீசிய இடத்தை அறிந்துகொண்டதுடன், அந்த படகை பின்தொடர்ந்து விரட்டிச்சென்று நிறுத்தினர். அதில் இருந்த 3 பேரையும் பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது, அவர்கள் 3 பேரும் கடத்தல்காரர்கள் என்பது தெரியவந்தது.

கடத்தல் பொருளைத்தான் கடலில் வீ்சினார்கள் என தெரிந்தாலும் அது என்ன? என்பதை அறிய அடுத்தக்கட்ட விசாரணை நடந்தது.

நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடினர்

தனித்தனியாக அவர்களிடம் விசாரித்தபோது, அதில் ஒருவர், “இலங்கை கடல் எல்லை வரை மற்றொரு படகில் வந்த இலங்கை கடத்தல்காரர்கள், அந்த மூட்டையை தங்களிடம் கொடுத்து தனுஷ்கோடி பகுதியில் கரை சேர்க்குமாறு கூறினர். எனவே அந்த மூட்டையில் என்ன இருந்தது?” என்று தெரியவில்லை என பதில் அளித்துள்ளார்.

மற்றொருவரிடம் நடத்திய விசாரணையில், “கடத்தி வந்தது தங்க கட்டிகள்தான். ஆனால், எவ்வளவு தங்கம் அதில் இருந்தது என தனக்கு தெரியாது” என்று கூறி இருக்கிறார்.

இதனால் அதிகாரிகள் உஷார் அடைந்தனர். கடலோர காவல் படையில் மூழ்கு நீச்சலில் சிறப்பு பெற்ற வீரர்களை கொண்டு நேற்று முன்தினம் முழுவதும் நீண்ட நேரம் தேடியும் அந்த மூட்டையை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அப்பகுதி முழுவதும் கடலோர காவல் படையின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ரூ.10½ கோடி

நேற்று 2-வது நாளாக தேடும் பணி தீவிரமாக நடந்தது. இந்தநிலையில் மண்டபம் கடற்கரையில் இருந்து ஒரு கிேலாமீட்டர் தூரத்தில் கடலின் அடியில் துணியுடன் சேர்த்து கட்டி போடப்பட்டிருந்த அந்த மூட்டையை நேற்று வீரர்கள் மீட்டெடுத்தனர். அதை பிரித்து பார்த்தபோது, அத்தனையும் தங்க கட்டிகளான இருந்தன. மொத்தம் 17.74 கிலோ தங்கம் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தங்க கட்டிகளை கடத்தி வந்ததாக மண்டபம் மரைக்காயர் பட்டினத்தை சேர்ந்த நாகூர்கனி உள்ளிட்ட 3 பேரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த 17.74 கிலோ தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.10½ கோடி இருக்கும் என்று தெரிவித்தனர்.

2-வது முறை

ஏற்கனவே 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே கடல் பகுதியில் கடத்தல்காரர்கள் சுமார் 15 கிலோ தங்கக்கட்டிகளை கடலில் வீசியதும், அதை கடலோர காவல்படையினர் மீட்டு எடுத்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது 2-வது முறையாக அதேபோன்று கடத்தல்காரர்களால் கடலில் வீசிய தங்க கட்டிகள் கைப்பற்றப்பட்டு உள்ளன.

பொதுவாக கடலில் வீசிய பொருளை அவ்வளவு எளிதாக கண்டுபிடிக்க முடியாது. ஆழ்கடலில் ஊசியை தேடுவது போல என்று கூறுவதை கேட்டு இருப்போம். அதற்கு காரணம் கடலில் ஒரு பொருளை தூக்கிப்போட்டால் அலையின் வேகம், கடல் நீரோட்டம் போன்ற காரணத்தால் அந்த பொருள் வேறு ஒரு இடத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு இருக்கக்கூடும்.

அதிகாரிகள் விளக்கம்

இருப்பினும் கடலில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை வீசினால், தங்களால் திரும்ப எடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் துணிந்து கடத்தல்காரர்கள் வீசியது எப்படி? என்பது தொடர்பாக அதிகாரிகள் அளித்த விளக்கம் வருமாறு:-

கடலில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மீன்கள் அதிகம் சிக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் அதே இடத்துக்கு சரியாக சென்று மீனவர்கள் மீன்பிடிக்க ஜி.பி.எஸ். போன்ற தொழில்நுட்ப கருவிகள் உதவுகின்றன.

எனவே அதுபோன்ற தொழில்நுட்ப கருவிகள் இருக்கும் தைரியத்தில்தான் கடத்தல்காரர்கள் கடலில் தங்க கட்டிகளை துணிந்து வீசினார்கள். மேலும் 18 கிலோ தங்க கட்டிகளுடன் கூடிய மூட்டை கனமானது என்பதால், அதிக தூரம் அடித்துச் செல்லப்பட்டு இருக்க முடியாது. ஒரு சில மணி நேரத்தில் அதை மீண்டும் எடுத்துவிட முடியும் என்று நம்பித்தான் கடத்தல்காரர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

பின்னணியில் இருப்பது யார்?

மேலும் கடலோர காவல் படையினரிடம் ஒருவேளை தாங்கள் சிக்கிக்கொண்டால், தங்கள் கூட்டாளிகளுக்கு தங்கம் கடலில் கிடக்கும் இடத்தை செல்போன் வசதியுடன் பகிர்ந்துகொள்ள முடியும் என்று நம்பி உள்ளனர். ஆனால், கடலோர காவல் படையினர் விரைந்து செயல்பட்டு, தங்க கட்டிகளை மீட்டுள்ளார்கள்.

இந்த கடத்தல் சம்பவத்தில் இலங்கையில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? அங்கிருந்து எந்த படகு மூலம் இந்திய கடல் எல்லை வரை வந்தார்கள்? பிடிபட்ட 3 பேரும் யாருக்கு இந்த தங்க கட்டிகளை கொண்டு சேர்க்க இருந்தார்கள்? என்பன பற்றிய விவரங்களை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதில் மேலும் பலர் சிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments