அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு விரைவில் பணிகள் தொடக்கம்
அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி

புதுக்கோட்டை மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையாக புதுக்கோட்டை நகரில் உள்ள டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனை இயங்கி வந்தது. இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்ட பின் மருத்துவமனை இடமாற்றம் செய்யப்பட்டது. இதனால் நகரில் இயங்கிய மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வசதி நிறுத்தப்பட்டது.

நகரில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வதில் பெரும் சிரமம் இருந்து வருகிறது. இதனால் பழைய அரசு மருத்துவமனையை மீண்டும் செயல்பட பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து பழைய அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் சிகிச்சை வசதி சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதில் தினமும் புறநோயாளிகள் 100-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அறந்தாங்கி அரசு மருத்துவமனை

இதற்கிடையில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறந்தாங்கி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அறந்தாங்கி நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நோயாளிகள் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருவதில் அம்மருத்துவமனையில் வசதியை மேம்படுத்த வேண்டும். டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

சிகிச்சை வசதியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதற்கு அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கடந்த ஆண்டு (2022) அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்புக்கு பின் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டன.

அரசாணை வெளியீடு

இந்த நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை வட்டாரத்தில் கூறுகையில், ``அறந்தாங்கி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம். மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டதன் மூலம் 5 மாடிகளுடன் கூடிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. மேலும் நோயாளிகளுக்கான சிகிச்சை வசதி மேம்படுத்தப்படும்.

ஏற்கனவே உள்ள வசதிகளுடன் கூடுதல் சிகிச்சை வசதிகள் கிடைக்கும். எம்.ஆர். ஐ.ஸ்கேன் வசதி தொடங்கப்படும். டாக்டர்கள், செவிலியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதேபோல கண்காணிப்பாளர், உண்டு உறைவிட மருத்துவ அதிகாரி பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் அதனை நிச்சயம் நிறைவேற்றப்படும். எனவே பொதுமக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments