துருக்கி மக்களின் நிவாரணத்துக்காக உண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய அரசு பள்ளி மாணவர்கள் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்
துருக்கி மக்களுக்கு நிவாரணமாக புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.

நிலநடுக்கம்

துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் காரணமாக ஏராளமான மக்கள் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்படைந்து வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு உலக நாடுகள் உதவி செய்து வருகின்றன. இந்த நிலையில் துருக்கி மக்களுக்கு நிவாரணமாக தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனது தந்தையுடன் வந்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர். இது பற்றிய விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை காமராஜபுரம் 25-ம் வீதியை சேர்ந்தவர் அக்பர் அலி (வயது 43). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பைரோஸ். இவர்களுக்கு அப்துல் மாலிக் (12), அப்துல் ரகுமான் (10) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இவர்களில் அப்துல் மாலிக் 6-ம் வகுப்பும், அப்துல் ரகுமான் 4-ம் வகுப்பும் புதுக்கோட்டையில் அரசு உயர் தொடக்கப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் பெற்றோர் கொடுக்கும் சிறு, சிறு பணத்தை உண்டியலில் சேமித்து வைப்பதை பழக்கமாக கொண்டுள்ளார்.

நிவாரண நிதி

இந்த நிலையில் துருக்கியில் நில நடுக்கத்தால் மக்கள் பாதிப்படைந்த நிலையில் அவர்களுக்கு நிவாரணமாக தங்களால் முடிந்த உதவியை செய்ய அவர்கள் எண்ணினர். இதற்காக உண்டியலில் அவர்கள் சேமித்த பணத்தை நிவாரணமாக கொடுக்க முன்வந்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இருவரும் தனித்தனியாக வைத்திருந்த உண்டியலில் சேமித்த பணத்தை எடுத்துள்ளனர்.

இதில் அப்துல் மாலிக் ரூ.600-ம், அப்துல்ரகுமான் ரூ.700-ம் சேமித்திருக்கின்றனர். இந்த பணத்தோடு தனது தந்தையின் பங்களிப்பு ரூ.800 உடன் சேர்த்து ரூ.2,100-ஐ கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி செல்வியிடம் துருக்கி மக்களுக்காக நிவாரண நிதியாக வழங்கினர். இதனை பெற்றுக்கொண்ட அவர், அரசு மூலம் அந்த பணத்தை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் மாணவர்களின் இந்த செயலை கண்டு அங்கிருந்த அனைவரும் பாராட்டினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments