காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அமைச்சர் ரகுபதி வழங்கினார். மேலும் உயிரிழந்தது எப்படி? உருக்கமான தகவல்கள்!!





புதுக்கோட்டை மாவட்டம், பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்ட தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலைகளை மாணவிகளின் குடும்பத்தினரிடம் அமைச்சர் ரகுபதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர்கள் குழந்தைசாமி (இலுப்பூர்), முருகேசன் (புதுக்கோட்டை) மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதேபோல் உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்ற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. உயிரிழந்த மாணவிகளின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தனது சொந்த நிதியில் இருந்து உயிரிழந்த, மாணவிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கி ஆறுதல் கூறினார்.


கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவிகள் 4 பேர் உயிரிழந்தது எப்படி என்பது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது

4 மாணவிகள் சாவு

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே பிலிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் இருந்து 15 மாணவிகள் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டனர். இவர்களை அதே பள்ளி ஆசிரியர்கள் செபாசகேயு, திலகவதி ஆகியோர் அழைத்து சென்றனர். கால்பந்து போட்டி முடிந்ததும் அங்கிருந்து கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆற்றில் இறங்கி குளிக்க சென்றபோது மாணவிகள் சோபியா (வயது 12), தமிழரசி (13), லாவண்யா (11), இனியா (11) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 மாணவிகளின் உடல்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு, வெவ்வேறு மயானங்களில் 3 பேரின் உடல்கள் அடக்கமும், ஒரு மாணவியின் உடல் தகனமும் செய்யப்பட்டன.

மாணவிகளுக்கு அஞ்சலி

மாணவிகளின் உடல்களுக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவர்கள் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வும் அஞ்சலி செலுத்தினார். மேலும் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பொட்டுமணி, ஆசிரியர்கள் செபாசகேயு, திலகவதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து, உயிரிழந்த 4 மாணவிகளின் வீடுகளில் மாணவிகளின் படங்களை வைத்து பெற்றோர்கள், உறவினர்கள் நேற்று கதறி அழுததால் ஊரே சோகத்தில் மூழ்கி இருந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வந்து மாணவிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். பள்ளியில் பயிலும் சக மாணவ, மாணவிகளும் அஞ்சலி செலுத்தினர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.



நடந்தது என்ன?

மாணவிகள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து விளையாட்டு போட்டிக்கு சென்ற மாணவிகள் கூறியதாவது:-

பள்ளியில் இருந்து ஒன்றிய, மாவட்ட, மாநிலம் மற்றும் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை பெற்றுள்ளோம். திருச்சி மாவட்டம் தோளூர்பட்டியில் உள்ள கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் நாங்கள் வெற்றி பெறவில்லை. எனினும், இரவில் தான் சான்றிதழ் கிடைக்கும் என்பதால் கரூர் மாயனூர் காவிரி ஆற்றை பார்வையிடுவதற்காக ஆசிரியர்கள் செபாசகேயு, திலகவதி ஆகியோருடன் காரில் 15 பேரும் சென்றோம்.

3 பேரை காப்பாற்றியவரும் பலியானார்

நாங்கள் ஒரு இடத்தில் குளிக்கலாம் என கூறியபோது, அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்கள் அங்குள்ள கோவில் அருகே சென்று குளிக்குமாறு கூறினார்கள். அதன்படி அங்கு சென்று, முதலில் ஆசிரியர் செபாசகேயு ஆற்றில் இறங்கி ஆழம் பார்த்து விட்டு வருவதாகவும், அதுவரை எங்களை கரையில் இருக்குமாறும் கூறி சென்றார். அவர் நடந்து சென்றபோது ஆழம் குறைவாக தெரிந்ததால் அவர் திரும்புவதற்குள் அவரை பின்தொடர்ந்து நாங்கள் 8 பேர் ஆற்றில் இறங்கினோம்.முழங்கால் அளவுக்கு தண்ணீர் இருக்கும்போதே ஒவ்வொருவராக மூழ்க தொடங்கினர். அதில் 3 பேரை காப்பாற்றிய சோபியா, 4-வது நபராக லாவண்யாவை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

யாரும் உதவிக்கு வரவில்லை

இதைப்பார்த்த நாங்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கத்தினோம், கதறினோம். ஆனால், அங்கு மீன்பிடித்தவர்கள் கூட உதவிக்கு வரவில்லை.மூழ்கியவர்களை மீட்பதற்காக மீன்பிடி வலைகளை கேட்டோம் அதைக்கூட அவர்கள் கொடுக்கவில்லை. கொடுத்தால் எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்குப்போட்டு விடுவார்கள் என்று கூறிவிட்டார்கள். அவர்கள் உதவியிருந்தால் யாரும் உயிரிழந்திருக்க மாட்டார்கள். மேலும் ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவிலேயே எங்களை விளையாட்டு போட்டிகளுக்கு அழைத்து செல்வார் என்றனர்.

4 பேரும் நீரில் மூழ்கினர்

உயிர் பிழைத்த சக மாணவி கோகிலா கூறியதாவது:- ஆசிரியர்கள் எங்களை காவிரி ஆற்றின் கரையில் நிறுத்திவிட்டு யாரும் எங்கும் போகக் கூடாது என்றார். இங்கேயே நிற்க வேண்டும் என்று கூறி முதலில் ஆசிரியர் செபாசகேயு தான் ஆழம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக ஆற்றில் இறங்கினார். ஆசிரியர்கள் சொல்லை மீறி மாணவிகள் தண்ணீரை பார்த்தவுடன் திடீரென ஆற்றில் 4 மாணவிகள் இறங்கினர். அப்போது தமிழரசி, லாவண்யா, இனியா ஆகியோர் தண்ணீரில் இறங்கிய போது அவர்களுக்கு முழங்கால் வரைக்கும் தான் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென்று மண் இழுக்கவே தமிழரசி, லாவண்யா, இனியா ஆகிய 3 பேரும் நீருக்குள் மூழ்க தொடங்கினர். இதை பார்த்த சோபியா அவர்களை காப்பாற்றுவதற்காக அவரும் ஆற்றில் இறங்கினார். அப்போது இனியாவை முடியை பிடித்து இழுக்காமல் அவரை பிடித்து மேலே தூக்கினார். இனியா அவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக சோபியாவை பிடித்து இழுத்தார். இதில் அடுத்தடுத்து 4 பேரும் நீருக்குள் மூழ்கினர். ஆனால் சோபியாவுக்கு நன்றாக நீச்சல் தெரியும். இவர்கள் 4 பேரும் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த போது அங்கிருந்தவர்கள் யாரும் மாணவிகளை காப்பாற்ற முன் வரவில்லை. அப்போது அங்கிருந்த இரண்டு இளைஞர்கள் மட்டும் உடனடியாக நீரில் மூழ்கி அவர்களை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர். அதுவும் பலனளிக்கவில்லை என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments