சிங்கப்பூர்வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம்: இந்தியா-சிங்கப்பூர் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடா முறை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
இந்தியா-சிங்கப்பூர் இடையேயான டிஜிட்டல் பண பட்டுவாடா முறையை பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் தொடங்கி வைத்தனர்.

நேரடி டிஜிட்டல் பண பட்டுவாடா

இந்தியாவில் ‘யு.பி.ஐ. ’ (ஒருங்கிணைந்த பண பட்டுவாடா முறை) என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் உள்ளது. இதேபோன்று சிங்கப்பூரில் ‘பே நவ்’ என்ற பெயரில் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை நடைமுறையில் இருக்கிறது. இந்தியாவின் ‘யு.பி.ஐ. ’ மற்றும் சிங்கப்பூரின் ‘பேநவ்’ ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இரு நாடுகள் இடையே டிஜிட்டல் பண பட்டுவாடாவுக்கு வகை செய்ய முடிவு செய்யப்பட்டது.

பிரதமர் மோடி தொடங்கினார்....

இவ்விரு நாடுகளின் டிஜிட்டல் பண பட்டுவாடா முறை இணைப்பு நிகழ்ச்சி, காணொலிக்காட்சி வழியாக நேற்று நடைபெற்றது. இதை பிரதமர் மோடியும், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் தொடங்கி வைத்தனர். இது சிங்கப்பூர் வாழ் இந்தியர்களுக்கும், இந்தியாவாழ் சிங்கப்பூர் மக்களுக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக சிங்கப்பூரில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும். அவர்கள் இந்த முறையில், இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு எளிதாகவும், விரைவாகவும், குறைந்த கட்டணத்தில் பணம் அனுப்ப முடியும். இதேபோன்று இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் மக்களும் தங்கள் நாட்டில் உள்ள குடும்பத்தினருக்கு குறைவான கட்டணத்தில் பணம் அனுப்புவது விரைவாகும் எளிதாகும்.

மிஞ்சுகிறது டிஜிட்டல்....

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது:- இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் 74 பில்லியன் ( 7 ஆயிரத்து 400 கோடி) எண்ணிக்கை யு.பி.ஐ. பண பட்டுவாடா நடந்துள்ளது. இதன்மூலம் ரூ.126 டிரில்லியன் ( ஒரு டிரில்லியன் என்பது ரூ.1 லட்சம் கோடி) பண பட்டுவாடா நடந்துள்ளது. நமது நாட்டில் விரைவில் ரொக்க பண பட்டுவாடாவை டிஜிட்டல் பண பட்டுவாடா மிஞ்சி விடும் என்று பல நிபுணர்கள் கணித்துள்ளனர். ஏராளமான அளவில் யு.பி.ஐ. டிஜிட்டல் பணபட்டுவாடா நடந்திருப்பது, உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட இந்த பண பட்டுவாடா முறை பாதுகாப்பானது என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய மைல் கல்

இந்த நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாசும், சிங்கப்பூர் பண ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் ரவி மேனனும் கலந்து கொண்டனர்.

வங்கிக்கணக்குகள் அல்லது இ-வாலட்களில் வைத்திருக்கும் பணத்தை யு.பி.ஐ. ஐ.டி., செல்போன் எண் அல்லது வி.பி.ஏ. என்று அழைக்கப்படுகிற இணைய பண பட்டுவாடா முகவரி மூலம் இந்தியாவுக்கு அல்லது இந்தியாவில் இருந்தும் பணம் அனுப்பலாம். பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய வங்கிகள் இந்தியாவுக்கு பணம் அனுப்பவும், இந்தியாவில் இருந்து பணம் அனுப்பவும் உதவும்.

சிங்கப்பூர் பயனாளிகளுக்கு டி.பி.எஸ். சிங்கப்பூர், லிகுய்ட் குரூப் (வங்கியற்ற நிதி நிறுவனம்) மூலம் இந்தச் சேவை கிடைக்கும். இந்த இரு நாடுகளின் பண பட்டுவாடா முறையை தொடங்கி வைத்தது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ நாங்கள் நிகழ்நேர பண பட்டுவாடா முறையை தொடங்கி வைத்திருப்பது இந்திய-சிங்கப்பூர் உறவுகளில் புதிய மைல் கல் ஆகும்” என குறிப்பிட்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments