தேவிபட்டினத்தில் படகு சவாரியின்போது கடலில் விழுந்த பெண்களை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினத்தில், படகு சவாரியின்ேபாது கடலில் விழுந்து இறந்த 2 பெண்களை காப்பாற்ற முயன்ற என்ஜினீயரும் உயிரிழந்தார்.

2 பெண்கள் கடலில் தவறி விழுந்தனர்

மதுரையை சேர்ந்த 11 பேர் வேனில் மகா சிவராத்திரி விழாவுக்காக ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் படையாச்சி காலனியில் உள்ள உலகநாயகி அம்மன் கோவிலுக்கு சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் தேவிபட்டினம் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றனர்.

பின்னர் அங்கிருந்த மீனவர் சுந்தரின் பைபர் படகை அமர்த்தி, அதில் ஏறி கடலில் 11 பேரும் படகு சவாரி சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக படகில் இருந்த மணிமேகலை(54), இருளாளி(56) ஆகிய பெண்கள், தவறி கடலுக்குள் விழுந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவர்களுடன் வந்திருந்த என்ஜினீயர் முத்துமாரி (33), அவர்களை காப்பாற்ற கடலுக்குள் குதித்தார். அவர் உள்பட 3 பேரும் கடலில் மூழ்கியதால் உடன் வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அலறினார்கள். உடனே மீனவர் சுந்தர், படகை கரைக்கு திரும்பி மற்றவர்களை கரையில் இறக்கிவிட்டார்.

பரிதாப சாவு

இது குறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று அவர்களை தேடினர். இ்ந்த நிலையில் மணிமேகலை, இருளாளி ஆகிய 2 பேரின் உடல்களும் கரை ஒதுங்கின.

என்ஜினீயர் முத்துமாரியை தேடும் பணி நடைபெற்றது. நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்ன? என்று தெரியாமல் இருந்தது.

இந்தநிலையில், நேற்று காலை 6 மணி அளவில் முத்துமாரி உடல் கடலில் மிதந்தது. படகில் சென்ற மீனவர்கள் அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்திருந்தனர். அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலி, மோதிரம் ஆகியவற்றை தேவிபட்டினம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. வாலிபர் முத்துமாரியின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அனுமதியின்றி படகு சவாரி அழைத்துச்சென்ற மீனவர் சுந்தர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்தது தொடர்பாக ராஜா (38) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments