குழந்தைகளை 6 வயதில்தான் 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு
குழந்தைகளை 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அடிப்படை காலம்

தற்போது, 5 வயது பூர்த்தியான குழந்தைகள், பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில், 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பை 6 ஆக உயர்த்துமாறு மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

புதிய தேசிய கல்வி கொள்கைப்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டு காலம், கல்வி பெறும் அடிப்படை காலம் ஆகும். இதில், 3 வருட மழலையர் கல்வியும், முதல் வகுப்பும், 2-ம் வகுப்பும் அடங்கும்.

6 வயதில் சேர்க்க வேண்டும்

மழலையர் கல்வி முதல் 2-ம் வகுப்பு வரை குழந்தைகளின் தடையற்ற கற்றல் அனுபவத்தை புதிய தேசிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது. அனைத்து அங்கன்வாடிகள், அரசு, அரசு உதவி பெறும் மழலையர் பள்ளிகள், தனியார் மழலையர் பள்ளிகள் ஆகியவற்றில் 3 ஆண்டுகள் தரமான மழலையர் கல்வி அளிக்கப்பட வேண்டும்.

அதைத்தொடர்ந்து, 6-வது வயதில், 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும். எனவே, புதிய தேசிய கல்வி கொள்கைக்கு ஏற்ப 1-ம் வகுப்பில் சேர்ப்பதற்கான குறைந்தபட்ச வயதுவரம்பு 6 ஆக உயர்த்தப்பட வேண்டும்.

2 ஆண்டு பட்டய படிப்பு

குழந்தைகளின் உளவியல் மற்றும் மனநல ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அவர்களை மிக இளம்வயதிலேயே பள்ளியில் சேர்க்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மழலையர் கல்வியில் 2 ஆண்டு பட்டய படிப்பு ஒன்றை மாநில அரசுகள் தொடங்க வேண்டும். இதற்கான பாடத்திட்டத்தை மாநில கல்வி கவுன்சிலே வகுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments