புதுக்கோட்டையில் 2 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் குளறுபடி வினா-விடைத்தாளில் பதிவெண் மாறியதால் தேர்வர்கள் பதற்றம்; கூடுதல் நேரம் வழங்கப்பட்டது
புதுக்கோட்டையில் 2 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வினா-விடைத்தாள் வழங்கியதில் பதிவெண் மாறியதால் தேர்வர்கள் பதற்றமடைந்தனர். இதையடுத்து, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

தேர்வில் குழப்பம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-2, குரூப்-2 ஏ பதவிகளுக்கான மெயின் தேர்வு நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக மன்னர் கல்லூரி, ஜெ.ஜெ.கல்லூரி ஆகிய 2 மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. மொத்தம் 1,031 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டிருந்தது. தேர்வை எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் நேற்று காலையிலேயே வந்தனர். தேர்வு மையத்திற்குள் பலத்த சோதனைக்கு பின் தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

காலையில் தமிழ் தகுதி தேர்வு நடைபெற்றது. தேர்வு மையத்திற்குள் காலை 9.15 மணிக்குள் தேர்வர்கள் சென்ற நிலையில் காலை 9.30 மணிக்கு வினா-விடைத்தாள் வழங்கப்பட்டது. அப்போது மன்னர் கல்லூரியில் சில தேர்வு அறைகளில் வழங்கப்பட்ட வினா-விடைத்தாளில் தேர்வர்களின் பதிவெண் மாறியிருந்துள்ளது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த தேர்வு அறை கண்காணிப்பாளரிடம் தெரிவித்தனர். ஒரே மாதிரியான புகாராக இருந்ததால் சற்று குழப்பம் ஏற்பட்டது.

கூடுதல் நேரம்

இதற்கிடையில் ஒரு சில அறையில் தேர்வை தொடர்ந்து எழுதும்படி கூறியிருக்கின்றனர். இதற்கு தேர்வர்கள் மறுப்பு தெரிவிக்கவே பிரச்சினை பூதாகரமானது. இதேபோல் ஜெ.ஜெ. கல்லூரியிலும் வினா-விடைத்தாள் வழங்கப்பட்டதில் தேர்வர்களுக்கு பதிவெண் மாறியிருந்தது. தமிழகத்தில் ஆங்காங்கே இதே புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து தேர்வர்களிடம் இருந்து அந்த வினா-விடைத்தாளை தேர்வு மைய பொறுப்பாளர்கள் திரும்ப வாங்கினர். அதன்பின் அந்தந்த அறையில் உள்ள தேர்வர்களின் பதிவெண் அடங்கிய வினா-விடைத்தாளை சரிபார்த்து வழங்கினர். சிலருக்கு மாற்றாக வைக்கப்பட்டிருந்த வினா-விடைத்தாளை வழங்கினர். இதனால் தேர்வு எழுத சுமார் ½ மணி நேரத்திற்கு மேல் தாமதமானது. இதையடுத்து தேர்வர்களுக்கு தேர்வு எழுத கூடுதல் நேரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

966 பேர் எழுதினர்

இதைத்தொடர்ந்து தேர்வர்கள் பதற்றத்துடனே தேர்வை எழுதினர். இதற்கிடையில் தேர்வில் குளறுபடி ஏற்பட்டதாக தகவல் பரவியதால் மையத்தின் வெளியே அவர்களுக்காக காத்திருந்த பெற்றோர், அவர்களுடன் வந்தவர்களும் பதற்றமடைந்தனர். பகல் 12.30 மணிக்கு முடிவடைய வேண்டிய தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. அதன்பின் மதியம் பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. தேர்வில் குளறுபடியால் புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன் தேர்வு மையங்களுக்கு சென்று பார்வையிட்டார். மேலும் தேர்வர்களுக்கு மாற்று வினா-விடைத்தாள் வழங்க நடவடிக்கை எடுத்தார். புதுக்கோட்டையில் 2 மையங்களில் இத்தேர்வை மொத்தம் 966 பேர் எழுதினர். 65 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றதை வீடியோ பதிவு செய்யப்பட்டன. தேர்வு மையங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

குளறுபடிக்கு காரணம் என்ன?
தேர்வர்களுக்குரிய வினா-விடைத்தாள் பதிவெண் மாற்றி வழங்கப்பட்டதால் குளறுபடிக்கு காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தேர்வு மையத்தில் ஒதுக்கப்படும் அறைகளில் தேர்வர்களுக்கான வினா-விடைத்தாள் மொத்தமாக பாதுகாப்பாக வழங்கப்படும். தேர்வு தொடங்கும் நேரத்தில் அந்த கட்டுகளை அவிழ்த்து தேர்வர்களுக்கு வழங்கப்படும். இதில் வரிசை எண் மாறியிருந்ததால் தேர்வர்களுக்கான வினா-விடைத்தாளும் மாறியது. இந்த வினா-விடைத்தாளானது ஒரே தாளாகும். கேள்வி இடம்பெற்றுள்ளதில் பதிலை அதிலே எழுத வேண்டும். இதில் ஒவ்வொரு அறைக்கான வரிசை எண் குறிப்பிட்டு வினா-விடைத்தாள் தொகுப்பை டி.என்.பி.எஸ்.சி. அனுப்பியதில் தவறு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த குளறுபடி ஏற்பட்டது. இதனை சரி செய்து நிவர்த்தி செய்யப்பட்டதால் பாதிப்பு இல்லை. தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments