புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் விரைவில் திறக்கப்படுகிறது
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறக்காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்பட உள்ளது.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகள் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் புறநோயாளிகளாக தினமும் 600-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக இங்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். மருத்துவமனையில் புறக்காவல் நிலையம் என தனியாக இதுவரை அமைக்கப்படாமல் இருந்தது. மருத்துவமனையின் உள் பகுதியில் கட்டிடத்தின் ஒரு அறையில் புறக்காவல் நிலைய போலீசாருக்கு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் போலீசார் பணியில் இருப்பார்கள். புறக்காவல் நிலையத்திற்கென தனியாக தொலைபேசி அல்லது செல்போன் எண் கிடையாது. விபத்தில் காயம், இறப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து போலீசார் இங்கிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிப்பது உண்டு.

புதிய கட்டிடம்

இந்த நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு எதிரே, இருசக்கர வாகனங்கள், ஆம்புலன்ஸ் நிறுத்துமிடம் அருகே புறக்காவல் நிலையத்திற்கென தனியாக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்திற்கு போலீஸ் நிலையத்தின் அடையாளமான வர்ணம் பூசப்பட்டுள்ளது. இதில் சுழற்சி முறையில் கூடுதலாக போலீசார் பணியாற்றவும், வாக்கி-டாக்கி வைக்கவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும் முடிவு செய்துள்ளனர்.

இதனால் இருசக்கர வாகனங்கள் திருட்டு உள்பட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். இந்த கட்டிடம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவித்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments