வாட்ஸ்அப் குழு அட்மினுக்கு சைபர் க்ரைம் நோட்டீஸ்



 - 


`ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள்' என்ற பெயரில் இயங்கிவரும் வாட்ஸ்அப் குரூப்பில் பகிரப்பட்ட தகவல்களுக்காக தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.

தேனி மாவட்டம், ஹைவேவிஸ் பேரூராட்சி மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது. இங்கு வெண்ணியார், இரவங்கலார் உள்ளிட்ட ஏழு கிராமங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்துவருகின்றனர். இதில் இரவங்கலார் பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் அட்மினாக இருக்கும் `ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள்' என்ற பெயரில் வாட்ஸ்அப் குரூப் இயங்கிவந்திருக்கிறது. அந்தக் குழுவில் பகிரப்பட்ட தகவல்கள் சைபர் குற்றத்தில் வருவதால் குரூப் அட்மினை விசாரணைக்கு அழைத்து தேனி மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றனர்.

போராட்டம்

நடந்தது என்ன என்பதையறிய ஹைவேவிஸ் மக்களிடம் விசாரித்தோம். ``சின்னமனூரிலிருந்து ஹைவேவிஸ் பேரூராட்சி இரவங்கலார் வரையில் 52 கிலோமீட்டர் சாலை இருக்கிறது. இதில் முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறையினர் 40 கிலோமீட்டர் சாலையை அமைத்தனர். இரண்டாம் கட்டமாக அமைக்கப்படவேண்டிய மணலார், வெண்ணியார் இரவங்கலார் மகாராஜாமெட்டு ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் 12 கிலோமீட்டர் சாலை புலிகள் சரணாலய எல்லையை காரணமாகக் கூறி அமைக்கப்படாமல் இருந்தது. இந்தச் சாலையை முழுமையாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என ஹைவேவிஸ் பேரூராட்சியில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான நாங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டோம். 

மேலும், சின்னமனூர் வனச்சரகத்தின் சார்பில் தென்பழனி சோதனைச்சாவடியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் மலைச்சாலையில் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி இருக்கிறது. மலைகிராம மக்களுக்கும் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனால், மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக்கூட மலைகிராம மக்களுக்கு அனுமதி வழங்காமல் வனத்துறையின் கெடுபிடி காட்டுகின்றனர் எனக் கூறி வனத்துறையினரைல் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஊர்வலமாகச் செல்ல முயன்றோம். போலீஸார் தடுத்து நிறுத்தியதால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு கலைந்து சென்றோம். 

வாட்ஸ்அப் வீடியோ பதிவில் பேசிய சரவணன்
வாட்ஸ்அப் வீடியோ பதிவில் பேசிய சரவணன்
இதையடுத்து 8-வது வார்டு கவுன்சிலர் முனீஸ்வரியின் கணவரும், திமுக 8-வது வார்டு செயலாளருமான சரவணன் ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் ஒருசில வீடியோ பதிவுகளைப் போட்டார். அதில் தி.மு.க ஹைவேவிஸ் பேரூர் செயலாளர் எம்.பி.கணேசன், அரசு வேலை வாங்கித்தருவதாக 20 லட்ச ரூபாய் வாங்கி மோசடி செய்தவர், கூட்டுறவில் 12 லட்ச ரூபாய் கையாடல் செய்தவர். மதுகடைகள் இல்லாத ஹைவேவிஸ் பகுதியில் பாண்டிசேரி, கர்நாடகாவிலிருந்து வாங்கிவரப்பட்ட மதுபாட்டில்களை 250 ரூபாய் வரை சட்டவிரோதமாக போலீஸார் உதவியுடன் விற்பனை செய்கிறார் என்பதையெல்லாம் சுட்டிக்காட்டியதால்  கொலைமிரட்டல் விடுக்கிறார். ஏன் சாலை வசதி வேண்டி போராட்டம் நடத்தினீர்கள் என மிரட்டுகிறார். ஒருவேளை நான் இறந்தால் அதற்கு எம்.பி.கணேசன்தான் காரணம் எனப் பதிவுசெய்திருந்தார். இந்த நிலையில்தான்  ஹைவேவிஸ் பேரூராட்சி நண்பர்கள் வாட்ஸ்அப் குரூப்  அட்மினை சைபர் க்ரைம் போலீஸார் விசாரணைக்கு அழைத்திருக்கின்றனர்'' என்றனர். 

நோட்டீஸ்

இது குறித்து சைபர் க்ரைம் போலீஸாரிடம் விசாரித்தோம். ``முதற்கட்டமாக குரூப் அட்மினை விசாரணைக்கு அழைத்திருக்கிறோம். வாட்ஸ்அப் குழுவைக் கலைக்கக் கூடாது. ஏற்கெனவே இருந்த உறுப்பினர்கள் அப்படியே இருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம். முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் வழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்'' என்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments