திருத்துறைப்பூண்டி நகரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்கப்படுமா?
திருத்துறைப்்பூண்டியில் இருந்து நெடும்பலம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலை (ECR)

திருத்துறைப்பூண்டி நகரத்திலிருந்து அண்ணாநகர், கோவில் தோப்பு, நெடும்பலம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் வகையில் ஒரு இடம் உள்ளது. கேரளாவில் இருந்து நாகப்பட்டினம், காரைக்காலுக்கு மீன் ஏற்றி செல்லும் வாகனங்கள் குறித்த நேரத்தில் மீன்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக வாகனங்கள் வேகமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கேரளாவை சேர்ந்த வாகனங்கள் மற்றும் திருவனந்தபுரம், மார்த்தாண்டம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், ராமநாதபுரம், சாயல்குடி, தொண்டி, மீமிசல், கோட்டைப்பட்டினம், அம்மாபட்டினம், மணமேல்குடி ,கட்டுமாவடி ,அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி வழியாக சென்னை செல்லும் வாகனங்கள் இந்த வழியாக தான் செல்கிறது.

திருத்துறைப்பூண்டியில் இருந்து நெடும்பலம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுடன் மோதி விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஊர்களில் இருந்து கேரளா வரை செல்லும் வாகனங்கள் இந்த சாலையில் தான் செல்கிறது. பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக நகரத்திற்கு செல்வதால் நெடும்பலம், அண்ணாநகர் பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் பஸ் வசதி இல்லாமல் தவித்து வருகின்றனர்.

மேலும் நெடும்பாலத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. எனவே திருத்துறைப்பூண்டியில் இருந்து நெடும்பலம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சோலார் விளக்குகள்

இதுகுறித்து நெடும்பலத்தை சேர்ந்த சரவணன் ராஜா கூறுகையில், இரவு நேரங்களில் நெடும்பலத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இடத்தில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனால் அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து வக்கீல் செல்லபாண்டியன் கூறுகையில், திருத்துறைப்்பூண்டியில் இருந்து நெடும்பலம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் இடத்தில் ஒரு சில நேரங்களில் பல்வேறு வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் வருவோருக்கும், செல்வோருக்கும் வாகனங்கள் தெரிவதில்லை. இதனால் அந்த இடத்தில் விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றால் அதிக நவீன சோலார் விளக்குகள் அமைக்க வேண்டும். அந்த இடத்தில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments