அறந்தாங்கியில் சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா? பல்வேறு தரப்பினர் எதிர்பார்ப்பு


அறந்தாங்கியில் அரசு சட்டக்கல்லூரி அமைக்கப்படுமா என்று பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து உள்ளனர்.

சட்டக்கல்லூரிகள்

தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், வேலூர், விழுப்புரம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் அரசு சட்டக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த சட்டக் கல்லூரிகளில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அவர்களின் அருகாமையில் இருக்கும் சட்ட கல்லூரிகளை தேர்வு செய்து படித்து வருகின்றனர்.

இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க இருந்த நிலையில், அந்த முடிவு மாற்றப்பட்டு புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. ஆனால் சட்டக்கல்லூரி இல்லை.

கூடுதல் செலவு

அறந்தாங்கியில் சட்டக் கல்லூரி இருந்தால் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகளும், அருகில் உள்ள சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன்பெறுவார்கள். காரணம் இந்த மாவட்டங்களுக்கு மையப்பகுதியாக அறந்தாங்கி உள்ளது. இதனால் அறந்தாங்கியில் சட்டக் கல்லூரி அமைத்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும். திருநெல்வேலி சட்டக் கல்லூரியில், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.

மதுரை சட்டக் கல்லூரியை தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்து படித்து வருகின்றனர். கோயம்புத்தூர் சட்டக்கல்லூரியில் திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் தேர்வு செய்து படித்து வருகின்றனர். திருச்சி சட்டக் கல்லூரியை கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தேர்வு செய்து படித்து வருகின்றனர். ஆனால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள சட்டக் கல்லூரியில் கிடைக்கும் இடங்களை தேர்வு செய்து படித்து வருகின்றனர். இவர்களுக்கு பல வழிகளில் கூடுதல் செலவு ஏற்படுகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

அறந்தாங்கியில் சட்டக் கல்லூரி அமைந்தால் தென் மாவட்டங்களில் சில மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் சில மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அறந்தாங்கிக்கு வந்து செல்ல சிரமமின்றி இருக்கும். இதனால் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் அரசின் சார்பில் சட்டக் கல்லூரி அமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வேறு மாவட்டங்களை தேடி போகும் நிலை

வக்கீல் வரதராஜன்:- புதுக்கோட்டை மாவட்டம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட மாவட்டமாக உள்ளது. கிராமப்புற மாணவர்கள் சட்டம் பயில வேறு மாவட்டங்களை தேடி போகும் நிலை உள்ளது. வருடந்தோறும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெறுபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அந்த மாணவர்களுக்கு சுயவருமானம் மற்றும் அரசு பணி சார்ந்த சட்டம் பயில ஒரு சட்ட கல்லூரியை புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைக்க வேண்டும்.

அறந்தாங்கியில் அமைக்க வேண்டும்

வக்கீல் முகமது சுல்தான்:- சட்ட கல்லூரி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் அமைக்கவேண்டும். அதற்கு காரணம், புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது நகராட்சியாகவும் மாவட்டத்தின் பெரிய ஒன்றியமாகவும் இருக்கிறது. அறந்தாங்கி பெரும் மக்கள் தொகை கொண்ட சட்டமன்ற தொகுதியாகும். அறந்தாங்கி தொகுதியில் சட்ட கல்லூரி அமைக்கப்பட்டால் தஞ்சையின் மேற்கு பகுதியும், ராமநாதபுரத்தின் கிழக்கு பகுதியையும் சேர்ந்த மாணவர்கள் பயனடையலாம். எனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு புதிய அரசு சட்ட கல்லூரியை அறந்தாங்கியில் அமைக்க வேண்டும்.

பயனுள்ளதாக இருக்கும்

ஏம்பல் முஜீப் ரகுமான்:- மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமான அறந்தாங்கி சுற்றிலும் அதிகப்படியான கிராமங்கள் உள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் கல்வி மேம்படவும், மாவட்டத்தின் மையப் பகுதியான அறந்தாங்கியில் சட்டக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டால் அது அனைத்து தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கல்லூரிக்கு தகுந்த இடமாக...

எரிச்சியை சேர்ந்த ரவிதாசன்:- புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக அறந்தாங்கி பெரிய நகரமாக இயங்குகிறது. இங்கு அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இந்த அறந்தாங்கி தொகுதியில் கிழக்கு கடற்கரையும் அமைந்து உள்ளது. அறந்தாங்கி பகுதியில் அரசு நிலங்கள் அதிகமாக இருப்பதால் இங்கு சட்டக் கல்லூரி அமைக்க தகுந்த இடமாக இருக்கும். அறந்தாங்கி பகுதியில் தண்ணீர் வசதிகளும், இட வசதிகளும் அரசு எதிர்பார்க்கும் அளவிற்கு அதிகமாக இருப்பதால் இங்கு சட்டக் கல்லூரி அமைத்தால் பொதுமக்களுக்கும், பெருமகிழ்ச்சியாக இருந்தாலும் கூட அறந்தாங்கி சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கும். இதை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மாணவர்கள் பயன்பெறுவார்கள்

பள்ளி மாணவர் முகமது ஹாரிஸ்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் மைய பகுதியாக இருக்கக்கூடிய அறந்தாங்கியில் சட்டக் கல்லூரி அமைக்க வேண்டும். ஏனென்றால் சில மாவட்டங்களுக்கு மையப் பகுதியாகவும் இருக்கிறது. இதை போல் ஒரு கல்லூரி அமைவதற்கு தேவையான இட வசதி, குடிநீர் வசதிகள் இருக்கிறது. அரசு பல்வேறு துறைகளில் சொந்தமான இடங்கள் அதிக அளவில் இருக்கிறது. இதில் ஒரு கல்லூரிக்கு தேவையான இடத்தை எடுத்துக் கொள்ளலாம். அறந்தாங்கி பகுதியில் சட்டக் கல்லூரி தொடங்கினால் புதுக்கோட்டை மாணவர்கள் மட்டுமல்லாமல் அருகாமையில் உள்ள பல மாவட்ட மாணவர்கள் பயன் பெறுவார்கள். இதனால் மாணவர்களுக்கு பயண செலவு மற்றும் விடுதி செலவு, மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் குறையும். அறந்தாங்கி பகுதியில் சட்டக் கல்லூரி அரசு சார்பில் தொடங்கப்பட்டால் அறந்தாங்கி மட்டுமில்லாமல் புதுக்கோட்டை மாவட்டம் கண்டிப்பாக நல்ல வளர்ச்சி பெரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments