நிலநடுக்கமா? ஆளை விழுங்கும் அதிராம்பட்டினம் ரயில் நிலையம்.. பூமியில் புதைந்த புது "பிளாட்ஃபார்ம்"





அதிராம்பட்டினத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய ரயில்நிலையத்தின் நடைமேடை பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டு, நிலத்திற்குள் புதைந்த நிலையில் இருப்பது பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கடந்த ஓராண்டாக சில ரயில்கள் இவ்வழியாக இயக்கப்படும் நிலையில் தரமற்ற கட்டுமானப் பணியால் இந்த வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

திருவாரூர் - காரைக்குடி வழியாக இருந்த மீட்டர் கேஜ் பாதையில் இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில் சேவை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் தொடங்கக்கோரி பல்வேறு கோரிக்கைகள் மக்களால் விடுக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மீட்டர் கேஜ் ரயில் பாதைகள் அகற்றப்பட்டு அகல ரயில்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.




ரயில் சேவை தொடக்கம்

திருவாரூர் - காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து திருவாரூர் - காரைக்குடி இடையே கடந்த 2019 ஆம் ஆண்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால், கேட் கீப்பர் இல்லாத காரணத்தால் பல இடங்களில் நிறுத்தி நிறுத்தி ரயில்கள் இயக்கப்பட்டன.

கேட் கீப்பர் பிரச்சனை

இதனால் பல மணி நேரம் ரயில் பயணம் தாமதமானது. கடந்த ஆண்டு கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட்டதால் பயண நேரம் பாதியாக குறைந்தது. ஆனாலும் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு 4 ஆண்டுகள் கழித்தும் இப்பகுதியில் இருந்து சென்னைக்கு நேரடியாக ரயில் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

சென்னை, எர்ணாகுளம் ரயில்
இதனை தொடர்ந்து வாரம் ஒருமுறை செக்கந்திராபாத் - ராமேஸ்வரம் இடையிலான சிறப்பு ரயில் சென்னை மார்க்கமாக அதிராம்பட்டினம் வழியாக சென்று வருகிறது. அதேபோல் வாரந்தோறும் கேரள மாநிலம் எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயிலும் இந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான மக்கள் பயணித்து வருகிறார்கள். இந்த நிலையில் பயன்பாட்டுக்கு வந்த சில ஆண்டுகளிலேயே இந்த ரயில் நிலையம் சேதமடைந்து காணப்படுகிறது.

நடைமேடையில் வெடிப்புகள்

குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்டதை போல் ரயில்நிலைய நடைமேடையில் ராட்சத வெடிப்புகளும், விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. பல இடங்களில் நடைமேடை பூமிக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின்றது. ஒரு ஆளின் இடுப்பு அளவு ஆழத்துக்கு ராட்சத குழிகளுடன் நடைமேடை காட்சி தருகிறது. இதனால் நடைமேடையில் உள்ள இரும்பு தூண்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.

முறைகேடு நடைபெற்றதா?

குடிநீருக்கு என அமைக்கப்பட்ட குழாய்கள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மக்களால் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறது. கட்டப்பட்ட சில ஆண்டுகளில் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டு உள்ளதற்கு காரணம் பராமரிப்பு குறைபாடா அல்லது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதா என்ற சந்தேகத்தை அதிராம்பட்டினம் மக்கள் எழுப்புகிறார்கள்.

மக்கள் அதிர்ச்சி

கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு தற்போதுதான் சில ரயில்கள் இவ்வழியாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மக்களால் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு புதிய ரயில் நிலையம் மோசமான நிலைக்கு மாறி இருப்பது அதிராம்பட்டினம் மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Source: one India Tamil

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments