கோலாலம்பூர் டு திருச்சி வந்த விமானத்தில் கதவு திறக்காததால் 1½ மணி நேரம் விமானத்தில் சிக்கி பயணிகள் தவிப்பு




திருச்சி விமான நிலையத்தில் விமான கதவு திறக்காததால் 1½ மணி நேரம் பயணிகள் விமானத்தில் சிக்கி தவித்தனர்.

விமானங்கள்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களை ஏர் ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்கூட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கி வருகிறது. தற்போது, திருச்சிக்கு வந்து செல்லும் விமான பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கதவு திறக்கவில்லை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.10 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் 158 பயணிகளுடன் திருச்சி விமான நிலையம் வந்தது. இதைத்தொடர்ந்து பயணிகள் விமானத்திலிருந்து இறங்குவதற்கு முற்பட்டபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தின் கதவை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

விமான ஊழியர்கள் பலமுறை முயற்சி செய்தும் கதவை திறக்க முடியவில்லை. அதன் பின் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்கு பின் கதவை திறந்தனர். இதனால் இரவு 10.10 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் பயணிகள் விமானத்தில் சிக்கி தவித்தனர். கதவு திறக்கப்பட்டதும் அனைத்து பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் கோலாலம்பூர் புறப்பட்டது

அதன்பின் மீண்டும் அந்த விமானம் இரவு 10.30 மணிக்கு பதிலாக தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 178 பயணிகள் பயணம் செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments