தமிழகத்தின் குட்டி மாலத்தீவு - கோடையில் குதூகலிக்க சூப்பர் சாய்ஸ்....!






கடல் வாழ் உயிரினங்களில் முக்கியமானது டால்பின். அனைவரும் விரும்பும் இந்த உயிரினத்தைப் பார்ப்பது என்பது அரிதான நிகழ்வாகும். பெரும்பாலும் வெளிநாட்டை தவிர, நம்மூர் கடற்கரையில், இவற்றைப் பார்க்க வேண்டும் என நினைத்தால் தாம் கடைகோடிக்கு தான் செல்ல வேண்டும்.

ஆம், டால்பினை ரசித்தபடியே விடுமுறை நாளை கழிக்க தமிழகத்திலேயே ஒரு அழகிய இடம் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும். தமிழகத்தின் குட்டி மாலத்தீவு என்று அழைக்கப்படும் குருசடை தீவைப் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியிலிருந்து தூத்துக்குடி வரை உள்ள மன்னார் வளைகுடா கடலில் சுமார் 21 தீவுகள் உள்ளன. இந்த பகுதியில் டால்பின், கடல்பசு, பவளப் பாறை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அரிய வகை உயிரினங்கள் உள்ளன. இந்த 21 தீவுகளும் ஒவ்வொரு சிறப்பை கொண்டுள்ளன.

இதில் மிக முக்கியமான தீவு குருசடை தீவு. இந்த தீவையொட்டியுள்ள புள்ளிவாசல் தீவு, சிங்கில் தீவு, பூமரிச்சன் தீவு ஆகிய பகுதிகளுக்குச் சென்று சுற்றுலாப் பயணிகள் பவளப் பாறைகள், மாங்குரோவ் காடுகளைச் சுற்றிப் பார்க்க தமிழக அரசு சார்பில் சூழல் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

எப்படிச் செல்வது

சொந்த வாகனத்தில் செல்வோர் ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் போகும் வழியில் பாம்பன் பாலத்தைக் கடந்து சென்றவுடன் அக்காள் மண்டபம் என்ற பகுதி வரும். அந்த பகுதியின் வலது புறத்தில் திரும்பி சுமார் 4 கி.மீ., தூரம் சென்றால், விவேகானந்தர் மண்டபம் வரும். அங்கிருந்து தான் இங்குச் செல்ல வேண்டும்.

இந்த பகுதி தமிழக வனத்துறையின் தீவிர கட்டுப்பாட்டில் உள்ளதால், இங்கு முறையான அனுமதியில்லாமல் செல்ல முடியாது. இந்த தீவுக்குக் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செல்ல அனுமதி உண்டு.

நுழைவு கட்டணம்

இந்த தீவுக்குள் செல்ல நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நபர் ஒன்றுக்கு ரூ.300 வசூலிக்கப்படும். படகு ஒன்றில் 10 நபர் வரை அழைத்துச் செல்லப்படுவர்.

பயணம்

நீல வண்ண மேகங்கள் இருபுறமும் பரவி அதை, பசுமையை வளைத்தது போல், படகு கிழித்து செல்லும் தண்ணீருக்கு நடுவில் பயணம் தொடங்கும். வெப்பத்துடன் கூடிய சில்லென்ற காற்று வருடிக் கொடுத்துக் கொண்டே நம்மை குருசடை தீவுக்கு அழைத்துச் செல்லும். சுமார் 20 நிமிட படகு சவாரிக்குப் பிறகு குருசடை தீவை அடையலாம். இப்படி குருசடை தீவுக்கு செல்லும்போது நம்முடன் ஒரு வழிகாட்டி கூட வருவார். அவர் தீவின் சிறப்புகள் குறித்து விளக்குவார்.

எதையெல்லாம் பார்க்கலாம்

மண் அரிப்பைத் தடுக்கும் அழகிய அவினேசியா என்ற மாங்குரோவ் காடுகள், மேசிவ் கோரல்(Massive Coral), பிரான்சிங் கோரல்(Branching Coral) உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள், வெளிநாட்டுப் பறவைகள், டால்பின்கள், டைனோசர் எலும்புக்கூடு, மிதக்கும் பாறை(Floating Stone),1858-ல் தொடங்கப்பட்ட முதல் ஆராய்ச்சி மையம், அருங்காட்சியம், அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளிட்டவற்றைக் காணும் போது, தகவல்களுடன் கூடிய புதிய அனுபவமாக அமையும்.

இதைத் தவிர தீவின் பின்புறம் அமைந்துள்ள நீல நிற கடலை பார்த்து ரசிப்பது ஆனந்தத்தின் உச்சிக்கே சென்று விடலாம்.

இந்த இடத்தில் அமர்ந்து கடலை ரசிக்கும் போது, மாலத்தீவில் அமர்ந்து ரசிப்பது போன்ற உணர்வை கொடுக்கும். கோடைக்கால வார இறுதியில் பசுமையுடன் கூடிய கடலை அழகை ரசிக்க ஏற்ற பகுதி இந்த குருசடை தீவாகும்.  நேரம் கிடைத்தால் கண்டிப்பாகச் சென்று வாருங்கள். இதை தவிர வரும் வழியில் பாம்பன் பாலம், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு மண்டம், மண்டபம் துறைமுகம் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுடன், சுவையான கடல் உணவுகளையும் ஒரு கை பார்த்துவிட்டு வரலாம்.















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments