பெங்களூர் - மைசூரு இடையே 10 வழிச்சாலை.. 75 நிமிடங்களில் செல்லலாம்.. நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி
பெங்களூர்- மைசூரு இடையே 118- கி.மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலை சுமார் 8 ஆயிரத்து 480 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சாலையின் அனைத்து பணிகளும் சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலயில், இந்த சாலையை இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த விரைவுச்சாலை மூலம் பெங்களூர் - மைசூர் இடையேயான பயண நேரம் 75 நிமிடங்களாக குறையும். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மே மாதம் 2-வது வாரத்திற்குள் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் எனத் தெரிகிறது.

தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் பாஜக மும்முரமாக உள்ளது.

கர்நாடக சட்டசபை தேர்தல்

பாஜக ஆட்சி நடைபெறும் ஒரே தென்மாநிலம் என்பதால், ஆட்சியை இழந்து விடக்கூடது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி வந்து சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை கர்நாடகத்திற்கு வருகை தந்துள்ளார்.

கர்நாடகம் வந்த பிரதமர் மோடி

மறுபக்கம் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், கர்நாடகாவில் இப்போதே தேர்தல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. இந்த நிலையில், கர்நாடகாவில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று கர்நாடக மாநிலம் வருகை தந்தார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களுருக்கு காலை 11.35 மணியளவில் பிரதமர் மோடி வந்தடைந்தார்.

நாட்டுக்கு அர்ப்பணித்தார் மோடி

தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மண்டியா மாவட்டம் வந்தடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஐபி சர்க்கிள் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரோட்ஷோவாக சென்றார். அப்போது வழி நெடுகிலும் தொண்டர்கள் பூக்களை தூவி பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி பெங்களூர்- மைசூரு 10 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

8 ஆயிரத்து 480 கோடி செலவில்

பெங்களூர்- மைசூரு இடையே 118- கி.மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலை சுமார் 8 ஆயிரத்து 480 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பெங்களூரில் இருந்து மைசூருவுக்கு சாலை மார்க்கமாக சென்றால் சுமார் 3 மணி நேரம் ஆகும். முக்கிய இரு நகரங்களை இணைக்கும் இந்த சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாட்களில் வாகனங்கள் வரிசை கட்டி செல்வதை பார்க்க முடியும். இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பயண நேரம் 75 நிமிடங்களாக..

இதையடுத்து இந்த சாலையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி, 10 வழி நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2018-ல் தொடங்கப்பட்டன. சாலை பணிகள் முடிந்த நிலையில் இன்று இந்த சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளார். இந்த சாலை தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் பெங்களூர் - மைசூரு இடையேயான பயண நேரம் 75 நிமிடங்களாக குறையும். இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments