திருச்சி அருகே கோர விபத்து: கார்-லாரி மோதல்; சிறுமி உள்பட 6 பேர் பலி கோவிலுக்கு சென்றபோது துயரம்





திருச்சி அருகே கார்-லாரி மோதிக்கொண்டதில் சிறுமி உள்பட 6 பேர் உயிரிழந்தனர். அவர்கள் கோவிலுக்கு சென்றபோது இந்த கோர விபத்து நடந்தது.

கோவிலுக்கு சென்றனர்

சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கோனார்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ஆனந்தாயி (வயது 57). இவரும், இவரது மருமகளான கோவிந்தன் மனைவி சகுந்தலா (28), பேத்தி தாவனாஸ்ரீ (9) மற்றும் எடப்பாடி பொன்பாளையத்தை சேர்ந்த திருமுருகன் (29) ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு காரில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் உள்ள மகாலிங்கம் கோவிலுக்கு பரிகார பூஜை செய்வதற்காக புறப்பட்டு வந்தனர்.

காரை டிரைவர் எடப்பாடி தாலுகா, கரட்டுப்புதூரை சேர்ந்த சந்தோஷ்குமார் (31) ஓட்டினார். அந்த கார் நாமக்கல் வந்தபோது அங்கு ஆனந்தாயியின் உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்களான நாமக்கல் மாவட்டம் தேத்தம்பாளையத்தை சேர்ந்த முத்துச்சாமி (58), இவரது மகன் தனபால் (36), உப்புக்குளத்தை சேர்ந்த அப்பு என்ற முருகேசன் (55), அதே பகுதியை சேர்ந்த ராசுவின் மகன் திருமூர்த்தி (43) ஆகிய 4 பேரும் கோவிலுக்கு செல்வதற்காக காரில் ஏறிக்கொண்டனர். இதையடுத்து கார் கும்பகோணம் நோக்கி வந்தது.

6 பேர் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி என்ற இடத்தில் நாமக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை சுமார் 3.25 மணியளவில் அந்த கார் வந்தது. அப்போது எதிரே அரியலூரில் இருந்து நாமக்கல் நோக்கி மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி முற்றிலும் உருக்குலைந்தது. மேலும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி ஆனந்தாயி, சிறுமி தாவனா ஸ்ரீ, முத்துச்சாமி, திருமூர்த்தி, முருகேசன் மற்றும் டிரைவர் சந்தோஷ்குமார் ஆகிய 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தனபால், சகுந்தலா, திருமுருகன் ஆகிய 3 பேர் படுகாயமடைந்து, உயிருக்கு போராடினர்.

3 பேருக்கு சிகிச்சை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங், தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இறந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆனால் கார் உருக்குலைந்த நிலையில் இருந்ததால் இறந்தவர்களின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் மற்றும் சமயபுரம் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு மீட்பு குழுவினர் விரைந்து வந்தனர். அவர்கள், போலீசாருடன் இணைந்து சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் காரில் இருந்து இறந்தவர்களின் உடல்களை ஒவ்வொன்றாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அதிகாலை நேரம் என்பதால் கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்திருக்கலாம். இதனால் டிரைவர் கண் அயர்ந்த நொடிப்பொழுதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதற்கிடையே இந்த விபத்தினால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

டிரைவர் கைது

மேலும் இந்த விபத்து குறித்து வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய்கோல்டன்சிங் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமாரை (43) கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர். மேலும் இறந்தவர்களின் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுதது, கல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய செய்வதாக இருந்தது.

கோவிலுக்கு சென்றபோது நடந்த கோர விபத்தில் சிறுமி உள்பட 6 ேபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பரிகார பூஜைக்காக 2 கார்களில் சென்றனர்
திருச்சி அருகே நடந்த கோர விபத்தில் பலியானவர்கள், ஒரு ஜோதிடரின் ஆலோசனையின்படி கோவிலுக்கு பரிகார பூஜை செய்வதற்கு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது, சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பொன்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ஜோதிடர் சுப்பிரமணி. இவர், தன்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பரிகார பூஜை செய்ய வேண்டியவர்களை, கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களுக்கு அழைத்து சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு, பரிகார பூஜை செய்ய வேண்டியவர்களை 2 கார்களில் அழைத்துக்கொண்டு கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டுள்ளார். இதில் ஒரு காரில் ஆனந்தாயி உள்ளிட்ட 9 பேர் வந்துள்ளனர். மற்றொரு காரில் ஜோதிடர் சுப்பிரமணி உள்ளிட்ட 6 பேர் சென்றுள்ளனர். முதலில் கும்பகோணம் மகாலிங்கம் கோவிலில் சாமி தரிசனத்தை முடித்துவிட்டு வைத்தீஸ்வரன் கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவில் கலந்து கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் கோவிலுக்கு செல்லும் வழியிலேயே 2 கார்களில் ஒன்று கோர விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது. விபத்தில் பலியான டிரைவர் சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருச்சி அருகே நடந்த கோர விபத்து குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:-

சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து திருச்சி வழியாக கும்பகோணத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர்கள் கார் விபத்துக்குள்ளானது வேதனை அளிக்கிறது. நம்பர் ஒன் டோல்கேட்டில் இருந்து நாமக்கல் வரை இதுபோன்று சாலை விபத்துகள் நடப்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு இந்த குறுகிய சாலையும் ஒரு காரணம். மேலும் வாகன ஓட்டிகளுக்கு சாலை தெரியும் வகையில் இரவு நேர ஒளிரும் விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாத நிலையும் உள்ளது. இதுபோன்று பல காரணங்களை கூறலாம். இதனால் திருச்சி-நாமக்கல் மார்க்கமாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் பலர் விபத்துக்குள்ளாகி, தங்கள் இன்னுயிரை இழக்கும் நிலை உள்ளது. எனவே இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி திருச்சி-நாமக்கல் சாலையில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments