வளிமண்டல கீழடுக்கு சுழற்சி: தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்




வளிமண்டல கீழடுக்கு காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

கோடைமழை

வளிமண்டல கீழடுக்குகளில் கிழக்கு மற்றும் மேற்குத்திசையில் காற்று சந்திப்பு நிலவுகிறது. இந்த வானிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் கோடைமழை பெய்துவருகிறது. இதனால் வெயிலின் கொடுமைக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.அந்தவகையில் சென்னையில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்றைய காலைப்பொழுதும் மழைப்பொழிவுடன் விடிந்தது. மேகமூட்டம், குளிர்ந்த காற்று என இதமான வானிலை நிலவியது.இந்தநிலையில் சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடி-மின்னலுடன்...

இதுகுறித்து சென்னை வானிலைஆய்வுமையத்தின் இயக்குனர் செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத்திசை காற்றும், மேற்குத்திசை காற்றும் சந்திப்பு காரணமாக 20-ந்தேதி (இன்று) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், 21-ந்தேதி (நாளை) ஓரிரு இடங்களிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சையில் 7 செ.மீ. பதிவு

தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பல இடங்களில் கோடைமழை பெய்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தஞ்சை மாவட்டம் கீழ் அணைக்கட்டில் 7 செ.மீ., தேனி மாவட்டம் மஞ்சளார், சேலம் மாவட்டம் மேட்டூர், செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கோவை மாவட்டம் சோலையாறு, காஞ்சீபுரம் மாவட்டம் ஏ.சி.எஸ். கல்லூரி ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.தர்மபுரி, ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்தூர், திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், தென்காசி, கிருஷ்ணகிரி, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments