செரியலூர் இனாம் ஊராட்சியில் சாலையை காணவில்லை என்று போலீஸ் நிலையத்தில் புகார் அளித்த கிராம மக்கள்
செரியலூர் இனாம் ஊராட்சியில் சாலையை காணவில்லை என்று கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

குண்டும், குழியுமான சாலை

கீரமங்கலம் பர்மா காலனி வழியாக செரியலூர் இனாம், ஜெமின் கிராமங்கள் வழியாக இணைப்புச்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் சென்று வருகின்றனர். இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிக்கப்படாததால் தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி பெரிய குழிகள் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைந்துள்ளனர். ஆனால் இந்த சாலை கீரமங்கலம் பேரூராட்சி மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சி ஆகிய இரு கிராமங்களுக்கிடையே செல்வதால் யார் அதனை சீரமைப்பது என்ற பிரச்சினை எழுந்தது.

போலீசில் புகார்

இந்த நிலையில் கீரமங்கலம் பேரூராட்சியில் இருந்து சாலையை மராமத்து செய்வதாக கூறியுள்ளனர். ஆனால் சுமார் 8.5 மீட்டர் அகலம் உள்ள சாலை தற்போது சுமார் 5 மீட்டர் அகலமே உள்ளது. அதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை மராமத்து செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் நேற்று பர்மா காலனி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையம் சென்று 3.5 மீட்டர் அகலத்தில் 400 மீட்டர் நீளத்திற்கான சாலையை காணவில்லை என்று ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.

அதாவது செரியலூர் இனாம் ஊராட்சி பகுதியில் சாலைக்காக எடுக்கப்பட்ட 3.5 மீட்டர் அகலம் நிலம் மற்றும் கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் எடுக்கப்பட்ட 5 மீட்டர் அகலம் கொண்ட சாலையில் 3.5 மீட்டர் அகலம் கொண்ட சாலையை காணவில்லை என்று புகார் மனுவில் கூறியுள்ளனர். இந்த புகாரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments