யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை: வாடிக்கையாளர்களுக்கு என்பிசிஐ விளக்கம்!




யுபிஐ மொபைல் வாலட் மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) விளக்கம் அளித்துள்ளது.

நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் போன்பே, கூகுள்பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக அதிக அளவில் யுபிஐ பரிவர்த்தனை செய்யப்படுகிறது. இதனால், ரொக்கத்தின் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

இந்த நிலையில், ரூ.2,000-க்கும் அதிகமாக செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வரும் ஏப்.1-ம் தேதி முதல் கட்டணம் விதிக்க தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் (என்பிசிஐ) முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சமூக ஊடக பயனாளர்கள்பலரும் தங்களது அதிருப்தியை மீம்ஸ்களாக வெளிப்படுத்தினர். இது, ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனை கட்டணம் தொடர்பாக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது: ஏப்.1-ம் தேதி முதல் யுபிஐ மொபைல் வாலட் (ப்ரீபெய்டு பேமன்ட் இன்ஸ்ட்ருமென்ட் - பிபிஐ) மூலம் மேற்கொள்ளப்படும் ரூ.2,000-க்கும் அதிகமான வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே 1.1 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.


வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது. யுபிஐ பரிவர்த்தனைகளில் 99.9 சதவீதம் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டவைதான். எனவே, தனிநபர்-தனிநபர், தனிநபர்-வர்த்தகர், வங்கி-வங்கி கணக்கு பரிமாற்றம் உள்ளிட்ட சாதாரண யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பரிமாற்றக் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.

போன்பே, கூகுள் பே செயலியில் யுபிஐ மூலம் மேற்கொள்ளப்படும் இந்த வகை பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள், வியாபாரிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு என்பிசிஐ தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு யுபிஐ பயனாளர்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே, தங்களது செயலியை பயன்படுத்தி யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்று பேடிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments