புதுக்கோட்டையை மாநகராட்சியாக தரம் உயர்த்த ஆய்வு அமைச்சர் கே.என்.நேரு தகவல் மக்கள் நல திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் பல்வேறு தரப்பினர் கருத்து




புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் முடிவு செய்யப்படும் என சட்டசபையில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. விவாதம் முடிந்ததும், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து, துறை சார்ந்த அமைச்சர்கள் பேசினார்கள்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

தரம் உயர்வு

கடந்த ஆண்டில், 6 நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும், 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் வந்த வண்ணமுள்ளன.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர், மாமல்லபுரம், பெருந்துறை, அவிநாசி, கோத்தகிரி, சங்ககிரி, திருவையாறு போன்ற சில பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், சில ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும், கோரிக்கைகள் வந்து கொண்டுள்ளன. நகராட்சிகளை மாநகராட்சிகளாகவும், பேரூராட்சிகளை நகராட்சிகளாகவும் தரம் உயர்த்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் 2024-ல் முடிவடைவதால், அதற்கு பின்னர் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளை நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கலாம் என்பதை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுடன் கலந்தாலோசித்து முதல்-அமைச்சரின் உத்தரவு பெற்று இறுதி முடிவு எடுக்கப்படும்.

சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் நடைபெற்று கொண்டிருக்கும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ஜூலை 2023-ல் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

மேலும், நெம்மேலிக்கு அருகிலுள்ள பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

கூட்டுக் குடிநீர் திட்டம்

கோவை மாவட்டத்தில் பில்லூர் கூட்டுக்குடிநீர் (மூன்றாம் கட்டம்) மற்றும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்கள் மே மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளன. அதேபோல், சங்கரன்கோவில் கூட்டுகுடிநீர் திட்டம் தற்போது சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தயார் நிலையில் உள்ளது.

ஜல்ஜீவன் மிஷன் மற்றும் அம்ரூத் 2.0 திட்ட நிதிஆதாரங்களுடன்,

18 மாவட்டங்களைச் சார்ந்த 6 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் மற்றும் 11,847 ஊரகக் குடியிருப்புகளில் உள்ள 74 லட்சத்து

84 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில், ரூ.14,652 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 36 கூட்டுக்குடிநீர் திட்டங்களில், 22 திட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எஞ்சிய 14 திட்டங்களும் விரைவில் துவங்கி, அடுத்த 2 ஆண்டுகளில் முடிவுற்று மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் தினசரி சுமார் 667 மில்லியன் லிட்டர் குடிநீர்

21 லட்சத்து 59 ஆயிரம் வீட்டு இணைப்புகள் மூலம் வழங்கப்படும்.

32 கூட்டு குடிநீர் திட்டங்கள்

இவை தவிர 7 மாநகராட்சிகள், 21 நகராட்சிகள், 28 பேரூராட்சிகள் மற்றும் 8,588 ஊரக குடியிருப்புகளில் உள்ள சுமார் ஒரு கோடியே 33 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.10,955 கோடி மதிப்பீட்டில் 32 குடிநீர் திட்டங்களும், 11 பாதாளச் சாக்கடைத் திட்டங்களும், பராமரிப்பிலுள்ள 56 கூட்டுக்குடிநீர் திட்டங்களை ரூ.1,722 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்து குடிநீர் வழங்கும் திட்டங்களும் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சாலைகள் மேம்பாடு

2022-23-ம் ஆண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி

உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில்

5,909 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன.

25 நகராட்சிகளில் புதிய எரிவாயு தகன மேடைகளும், 17 நகராட்சிகளில் ஏற்கனவே உள்ள சாதாரண தகன மேடைகளை நவீன எரிவாயு தகன மேடைகளாகவும் இந்த ஆண்டே மாற்றி அமைக்கப்படும். பேரூராட்சிகளில் 70 நவீன எரிவாயு தகன மேடைகள் ரூ.99 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில், மேலும் 25 நவீன தகன மேடைகள் அமைக்கப்படவுள்ளன.

கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழும்

135 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சென்னை மாநகரில் உள்ள விக்டோரியா பொது மண்டபம் அதன் பழைய தொன்மை மாறாமல் புத்துயிர் பெறும் வகையில் ரூ.33 கோடியில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் நல திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை சமஸ்தானம்

தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் புதுக்கோட்டை நகராட்சி வரலாறு 100 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். நாட்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தனி சமஸ்தானமாக புதுக்கோட்டை விளங்கியது. கடந்த 1912-ம் ஆண்டு அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவ தொண்டைமான் ஆட்சி காலத்தில் புதுக்கோட்டை நகராட்சி உருவானது. அதில் அப்போது 18 உறுப்பினர்கள் இருந்தனர். தொடக்கத்தில் மூன்றாம் நிலை நகராட்சியாக இருந்தது. பின்னர் நாடு சுதந்திரம் பெற்ற பின் புதுக்கோட்டை சமஸ்தானம் இணைக்கப்பட்டது.

இதில் கடந்த 1949-ல் 2-ம் நிலை நகராட்சியாகவும், 1963-ல் முதல் நிலை நகராட்சியாகவும், கடந்த 1988-ம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

மாநகராட்சியாக தரம் உயர்வு

புதுக்கோட்டை நகராட்சியின் பரப்பளவு 21.95 சதுர கிலோ மீட்டர் ஆகும். இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். புதுக்கோட்டை நகராட்சியில் தற்போது 42 வார்டுகள் உள்ளன. இந்தநிலையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

புதுக்கோட்டை வடக்கு 2-ம் வீதியை சேர்ந்த அறிவுடையநம்பி:- புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அதிகப்படியான பரப்பளவு கூடும். புதுக்கோட்டை மக்களுக்கு அதிகப்படியாக திட்டங்கள் கிடைக்கும். மக்கள் நல திட்டங்களுக்கான நிதி அதிகம் கிடைக்கும். மேலும் ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு நிர்வாகம் செம்மைபடுத்தப்படும்.

வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்

புதுக்கோட்டையில் தொழில் செய்து வரும் ஆறுமுகம்- புதுக்கோட்டை மாநகராட்சியாக தரம் உயர்ந்தால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. மேலும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கலாம். புதுக்கோட்டை மட்டும் அல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளும் வளர்ச்சி அடையும். மாநகராட்சி என்றாலே ஒரு தனி சிறப்புதான். அதிலும் சமஸ்தானமாக திகழ்ந்த புதுக்கோட்டை, மாநகராட்சியாக தரம் உயர்வது என்பது அனைவருக்கும் பெருமைதான். அதனால் மாநகராட்சியாக தரம் உயர்வது எப்போது என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

சாலை, பாலங்கள்

புதுக்கோட்டையை சேர்ந்த விவசாயி மாணிக்கம்:- புதுக்கோட்டை நகராட்சி தரம் உயர்த்தப்பட்டால் நகர்ப்புற கட்டமைப்பு திட்டமிட்டு வடிவமைக்கப்படும். அனைத்து மக்களின் சமூக பொருளாதார வசதிகள் மேம்பாடு அடையும். வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி, பொருளாதார வசதி, கழிவுநீர் வசதிகள் மற்றும் சாலை மற்றும் பாலங்கள், தெருவிளக்குகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மேம்படுத்தப்படும்.

அதிக நிதி கிடைக்கும்

புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கடந்த 2021-ம் ஆண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. 9ஏ நத்தம்பண்ணை, 9பி நத்தம்பண்ணை, முள்ளூர், கவிநாடு கிழக்கு, கவிநாடு மேற்கு, திருமலைராயசமுத்திரம், திருக்கட்டளை, தேக்காட்டூர் ஆகிய ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அரசுதான் முடிவெடுக்கும். நகராட்சி எல்லை பகுதி விரிவடையக்கூடிய ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் பதவி காலம் முடிவடைய வேண்டி உள்ளது. பதவி காலம் நிறைவடைந்ததும் அவை நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக அறிவிக்கப்படலாம். இது வருகிற 2024-ம் ஆண்டில் சாத்தியமாக வாய்ப்புள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் திட்டப்பணிகள் அதிகம் வர வாய்ப்புள்ளது. மேலும் நிதி ஒதுக்கீடுகளும் அதிகமாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments