அரசு டவுன் பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது டிரைவர் உள்பட 16 பேர் படுகாயம்




கீரனூர் அருகே அரசு டவுன் பஸ் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், டிரைவர் உள்பட 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

மரத்தில் பஸ் மோதியது

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து நேற்று மதியம் கீரனூர் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை முத்துக்காடு பகுதியை சேர்ந்த டிரைவர் கண்ணுத்துரை (வயது 49) ஓட்டினார். கண்டக்டராக பாலசுப்ரமணி (53) பணியாற்றினார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.

மதுரகுளம் என்ற இடத்தில் பஸ் சென்றபோது பிரேக் பிடிக்காததால் டிரைவர் அதிர்ச்சியடைந்தார். பின்னர் பஸ்சை சாலையோரம் நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது. இதில் அந்த மரம் அடியோடு சாய்ந்தது. மேலும் அந்த பஸ் அங்கிருந்த பள்ளத்தில் ஒருபக்கமாக கவிழ்ந்தது.

16 பேர் படுகாயம்

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து வலியால் துடித்தனர். இதையடுத்து, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கீரனூர் போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்தனர். பின்னர் காயம் அடைந்த பஸ் டிரைவர் கண்ணுத்துரை, குளத்தூரை சேர்ந்த சங்கீதா (33), ஆனந்தி (55), பாப்புடையான்பட்டியை சேர்ந்த இந்திராணி (50), சவுந்தர்யா (27), புதுக்கோட்டையை சேர்ந்த தமிழ்ச்செல்வி (50), பழனியம்மாள் (45), மின்னாத்தூர் முனியம்மாள் (40), சுப்பிரமணி (58), வத்தனாக்கோட்டையை சேர்ந்த கனகாம்பாள் (50), பொம்மாடி மலையை சேர்ந்த சுகந்தி (27), ஒடுகம்பட்டியை சேர்ந்த ஜனத் (35), முத்து லட்சுமி (56), கண்ணங்குடியை ேசர்ந்த அமுதா (40), உடையாளிபட்டியை சேர்ந்த மகாலிங்கம் (51), சவேரியாப்பட்டினம் பகுதியை சேர்ந்த முத்துக்கண்ணு (35) ஆகிய 16 பேரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

இதில் சிலர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments