தொண்டி பேரூராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்


தொண்டி பேரூராட்சியில் கடந்த ஓராண்டில் ரூ.7¾ கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக பேரூராட்சி தலைவி ஷாஜகான்பானு ஜவகர் அலிகான் பெருமிதம் அடைந்தார்.,

தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவி ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த தையொட்டி ஓராண்டு சாதனை விழா நடைபெற்றது. விழாவுக்கு பேரூராட்சி தலைவி ஷாஜகான் பானு ஜவகர் அலிகான் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் மகாலிங்கம், துணைத் தலைவர் அழகு ராணி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
அனைவரையும் பேரூராட்சி அலுவலர் ரவி வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவி கேக் வெட்டி ஓராண்டு சாதனை சிறப்பு மலரை வெளியிட்டார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.7.85 கோடி மதிப்பில் தொண்டி பேரூராட்சி பகுதிகளில் தார் சாலைகள், பேவர் பிளாக் சாலைகள், ஊருணிகள் மேம்பாடு, புதிதாக குடிநீர் குழாய் அமைத்தல், மராமத்து பணிகள், கழிவுநீர் கால்வாய், பொது சுகாதார பணிகள், குடிநீர் பணிகள், புதிய தெருவிளக்குகள் போன்ற பல்வேறு வகையான வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேரூராட்சியின் வளர்ச்சிக்கு அதிக அளவில் நிதிகளை வழங்கிய தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆண்டில் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை தமிழகத்தின் முன்மாதிரி பள்ளியாக மாற்ற பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
 தொண்டியில் ரூ.50 லட்சம் மதிப்பில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பூங்கா அமைக்கவும் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்பில் கடற்கரை மாதா ஆலயம் முதல் பயணியர் விடுதி வரை கடற்கரை சாலையில் தடுப்புச்சுவர் அமைத்து நடை பாதை அமைக்க திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தொண்டி பேரூராட்சியில் விரைவில் வாரச்சந்தை, தொண்டி செய்யது முகமது அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மத்திய அரசின் சிறுபான்மையினர் நல வாரியத்தின் மூலம் மினி ஸ்டேடியம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.தொண்டியில் அரசு மகளிர் கல்லூரி அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தொண்டி தி.மு.க. நகர செயலாளர் இஸ்மத் நானா, பேரூராட்சி கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி மாணவ-மாணவியர், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments