தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் 'மாஸ்க்' கட்டாயம்.. கொரோனா தொற்று பாதிப்பை குறைக்க அதிரடி
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் கட்டுக்குள் வந்தது. ஆனால், உருமாறிய கொரோனா வைரஸ் அவ்வப்போது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் எஸ்பிபி, பிஏ 2 ஆகிய இரண்டு வைரஸ்கள் புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மகாராஷ்டிரா, குஜராத், கேரளா போன்ற மாநிலங்களில் தினந்தோறும் குறைந்தபட்சம் 500 பேர் புதியதாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாடு முழுவதும் நேற்றைய நிலைவரத்தை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,400க்கும் அதிகமானோர் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பாதிப்பு குறைவாகதான் இருக்கிறது. இருப்பினும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு துறை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தமிழ்நாடு மாநில சுகாதாரப் பேரவையின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று (மாரச் 31) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பினனர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் முகக்கவசம் கட்டாயம் என்பதை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பேசியதாவது, "மாநில சுகாதார பேரவை தேசிய அளவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் இந்த பேரவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
சர்வதேச அளவில் தென்கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இந்த சுகாதார பேரவை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பேரவை மூலம் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளிவல் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருபவர்களுக்கு விமான நிலையங்களில் 2 சதவிகிதம் ரோண்டம் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் தினமும் 10 பெருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கொரோனா தொற்று பாதிப்பு கட்டுக்குள்தான் இருக்கிறது.

இருப்பினும் சில நடைமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது. எனவே நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றம் மருத்துவமனைக்கு வரும் அனைவரும் 100% கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அச்சமடைய வேண்டியதில்லை. வரும்முன் காப்போம் என்பதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கையாதான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்வது அவசியம். இது மருத்துவமனையிலிருந்து தொடங்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments