ராமேசுவரம் - இலங்கை இடையே இரு வழித்தடத்தில் கப்பல் போக்குவரத்து - சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு




ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு இரு வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. விவாதத்தின் நிறைவில் அத்துறைகளின் அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசியதாவது: சாலை விபத்துகளில் சிக்கி தவிப்போரின் உயிர்களை காக்க முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய ‘இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48’ திட்டத்தின்கீழ், 4 ஆயிரத்து 363 விபத்து பகுதிகள் கண்டறியப்பட்டு, அவற்றில் மாநிலநெடுஞ்சாலைத் துறை சாலைகளுக்கு உட்பட்ட 2 ஆயிரத்து 93 விபத்துப் பகுதிகள் ரூ.90 கோடியில் மேம்படுத்தப்படும்.

நபார்டு வங்கி கடனுதவியுடன் கிராமப் பகுதிகளில் 158 பாலப்பணிகள் ரூ.818 கோடியே 66 லட்சத்தில் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. அனைத்து தரைப் பாலங்களும் 2026-ம் ஆண்டுக்குள் உயர்மட்டப் பாலங்களாக, மேம்படுத்தப்பட்டு, தரைப்பாலங்களே இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, அவர் வெளியிட்டஅறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு கடல்சார் வாரியம் சார்பில் இந்தியா - இலங்கை இடையே குறைந்த தூர பயணிகள் போக்குவரத்து ராமேசுவரம் - தலைமன்னார் (50 கிமீ) இடையே, ராமேசுவரம் - காங்கேசந்துறை (100 கிமீ) இடையே என இரு வழித்தடங்களில் தொடங்க நடவடிக்கைமேற்கொள்ளப்படும். தொலைதூர சாலை பயனர்கள், ஓட்டுநர்களுக்கு சுகமான பயண அனுபவத்தை ஏற்படுத்தித் தர மாநில நெடுஞ்சாலைகளில் 3 முக்கிய இடங்களில் ‘சாலையோர வசதி மையம்' அமைக்கப்படும்.


அதிவேக விரைவுச் சாலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ‘தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம்' புத்துயிரூட்டப்படும். ‘பள்ளங்களற்ற சாலை' என்ற இலக்கை அடைய, அது தொடர்பாகபுகார் தெரிவிக்க கைபேசி செயலி உருவாக்கப்படும். முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டை ஒட்டி மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். 9 மாவட்டங்களில் ரூ.215.80 கோடியில் 13 ஆற்றுப் பாலங்கள் கட்டப்படும்.

மலைப் பகுதிகளில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் மற்றும் ஆபத்தான வளைவுகளில் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.100 கோடியில் ‘உருளை விபத்து தடுப்பான்கள்' அமைக்கப்படும். அனைத்து காலநிலைகளிலும் ‘தங்கு தடையற்ற போக்குவரத்து' திட்டத்தில் ரூ.787கோடியில் 273 தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக கட்டப்படும்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அரங்குக்கு செல்லும் சாலை ரூ.22.80 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும். சென்னையில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாக தேவையான இடங்களில் ரூ.116 கோடியில் சிறு பாலங்கள், கால்வாய்கள் கட்டப்படும். தருமபுரி, சேலம், திருப்பத்தூர், விருதுநகர், வேலூர் ஆகியமாவட்டங்களில் ரூ.238 கோடியில் 6 ரயில்வே மேம்பாலம் கட்டப்படும்.

அரசு அலுவலர்களுக்கு குடியிருப்பு: சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 190 ‘சி’ வகை அரசு அலுவலர்களுக்கான புதிய அடுக்கு மாடி குடியிருப்பு ரூ.103 கோடியில் கட்டப்படும். சேப்பாக்கம் பழைய ஆவண அறை கோபுரம் உள்ளிட்டதமிழகத்தில் 13 இடங்களில் உள்ள பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.50 கோடியில் புனரமைக்கப்படும். கட்டிடக் கலை அலகில் ஒரு இணைத் தலைமை கட்டிட கலைஞர், ஒருஉதவி கட்டிட கலைஞர், 5 இளநிலைகட்டிட கலைஞர் உள்ளிட்ட 8 பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments