கொரோனா பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி: அரசு ஆஸ்பத்திரிகளில் முக கவசம் கட்டாயம் அமலுக்கு வந்தது
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிற நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் முக கவசம் அணிவது கட்டாயம் அமலுக்கு வந்தது.

முக கவசம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், பணிபுரிபவர்கள், டாக்டர்கள் உள்பட அனைவரும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டன. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டா்கள் மற்றும் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளிகள், அவர்களுடன் வந்த பார்வையாளர்கள் பலர் முக கவசம் அணிந்திருந்தனர். ஒரு சிலர் முக கவசம் அணியாமல் காணப்பட்டனர். அவர்களை முக கவசம் அணியுமாறு அங்கிருந்த பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

சுகாதார நிலையங்கள்

இதேபோல் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த காவலாளிகளும் முக கவசம் அணிந்து பணியாற்றினர். முன்பு கொரோனா காலத்தில் இருந்ததை போல் பொதுமக்கள் பலரும் மருத்துவமனை வளாகத்தில் முக கவசம் அணிந்திருந்ததை காணமுடிந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள் உள்பட அரசு ஆஸ்பத்திரிகளில் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், பணியாளர்களுக்கு முக கவசம் வழங்க போதுமான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியில் இருந்து வரும் நோயாளிகள், பார்வையாளர்கள் அவர்களாக முக கவசம் வாங்கி அணிந்து வர வேண்டும். உள் நோயாளிகளுக்கு முக கவசம் வழங்கப்படும். புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு அதிகம் இல்லை. ஓரிரு தொற்று பாதிப்பு இருந்தாலும் டாக்டர்கள் அறிவுரைப்படி வீட்டு தனிமையில் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனா பரிசோதனையானது தொடர்ந்து நடைபெறுகிறது'' என்றார். அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் இனி முக கவசம் அணிந்து செல்வது கட்டாயமாகும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments