‘‘செறிவூட்டப்பட்ட அரிசியால் ஆரோக்கியமாக வாழலாம்’’ கலெக்டர் தகவல்
கூட்டுறவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அரங்கு புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அமைக்கப்பட்டிருந்தது. இதில் செறிவூட்டப்பட்ட அரிசியின் மூலம் தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்களை பொதுமக்களுக்கு கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். அதன்பின் அவர் பேசும்போது கூறியதாவது:- தமிழக அரசால் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படும் அரிசிகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படவுள்ளது. அரிசி செறிவூட்டுதல் 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது. மாவாக அரைக்கப்பட்ட அரிசியில் தாதுக்கள், வைட்டமின்கள் சேர்க்கப்பட்டு அரிசி குருணைகளாக உருவாக்கப்படுகிறது. இவ்வாறு குருணைகளாக உருவாக்கப்பட்ட செறிவூட்டப்பட்ட அரிசி சாதாரண அரிசியுடன் 1:100 என்ற விகிதத்தில் 1 மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெட்ரிக் டன் அரிசியுடன் கலந்து, 100 மெட்ரிக் டன் சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்படுகிறது.

 இந்த செறிவூட்டப்பட்ட அரிசி அதே சுவை, அதே தோற்றம், அதே சமையல் முறையில் சமைக்கலாம். இதில் உள்ள இரும்பு சத்து மூலம் ரத்த சோகையினை தடுக்கலாம். போலிக்அமிலம் மூலம் கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் உதவுகிறது. வைட்டமின் பி-12 மூலம் நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டிற்கு உதவுகிறது. எனவே தமிழக அரசால் வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியினை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்தநிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட வழங்கல் அலுவலர் கணேசன், துணைப்பதிவாளர் (பொ.வி.தி.) கோபால் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments