கோடை மழை பலன் அளிக்கவில்லை: அதிராம்பட்டினம் பகுதியில் தண்ணீர் இன்றி வறண்ட அலையாத்திக்காடுகள் பறவைகள் வெளியேறும் அவலம்






கோடை மழை பலன் அளிக்காததால் அதிராம்பட்டினம் பகுதியில் அலையாத்திக்காடுகள் வறண்டு வருகின்றன. இதனால் பறவைகள் வெளியேறும் அவலம் ஏற்பட்டு உள்ளது.




அலையாத்திக்காடுகள்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைப்பகுதியை ஒட்டி அலையாத்திக்காடுகள் உள்ளன. இந்தக்காடுகள் சுனாமி மற்றும் புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளில் இருந்து கடற்கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது.

மேலும் அலையாத்தி மரங்களின் உதிர்ந்த இலைகள் மக்கி கடலில் கலப்பதால் இறால் மற்றும் பிற மீன்களுக்கு உணவாக பயன்பட்டு மீன் இனப்பெருக்கம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது. இந்த அலையாத்திக்காடுகள் தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் தம்பிக்கோட்டை மறவக்காடு, கரிசக்காடு, கருங்குளம், அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை மற்றும் கீழத்தோட்டம் உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் அணிவகுத்து காணப்படுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக அமைந்துள்ளது.

இயற்கை சூழல்

இந்த அலையாத்திக்காட்டு பகுதிகளில் காட்டுப்பன்றி, காட்டுப்பூனை, நரி மற்றும் கொடிய விஷப்பாம்புகள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளதோடு கடல் காகங்களும் ஏராளமாக உள்ளன. ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் மழை தொடங்கி தொடர்ந்து பெய்யும் தருவாயில் அலையாத்திக்காட்டுப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி கடும் குளிருடன் பறவைகளுக்கு ஏற்ற இயற்கை சூழல் காணப்படும்.

கோடை மழை

இதனால் அலையாத்திக்காடுகளுக்கு இலங்கை, பாகிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா, பர்மா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பூநாரை, கூலக்கடா, செங்கல்நாரை, நீர்க்காகம், ஊசிவால் வாத்து, வெண்கொக்கு, கொளத்துக்கொக்கு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பறவைகள் வரத்து தொடங்கும்.

பின்னர் அவை கோடைகாலம் தொடங்கும் நிலையில் அதாவது ஏப்ரல் மாத இறுதியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவிடும். இந்தநிலையில் கோடை மழை பெய்ததால் அதிராம்பட்டினம் பகுதியில் ஏரி, குளங்களில் தண்ணீர் இருந்தது. இதைப்போல அலையாத்திக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தது. இதனால் பறவைகள் பெரும்பாலும் இப்பகுதி முகாமிட்டு இருந்து வந்தது.

வெளியேறும் பறவைகள்

அலையாத்திக்காடுகளில் உள்ள நீர்நிலைகளில் கோடைக் காலத்திலும் தண்ணீர் இருக்கும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் அதிகரித்து வந்த நிலையில் அதிராம்பட்டினத்தில் நீர்நிலைகள் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது.

இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் வெளிநாட்டுப்பறவைகள் மற்றும் வெள்ளைக் கொக்குகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிவருகின்றன. ஏரி, குளங்கள் மற்றும் உப்பளங்கள் என எங்கு பார்த்தாலும் பறவைகள் பறந்து விளையாடும் ரம்மியமான காட்சிகளை தற்போது பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

நீர்த்தேக்க தொட்டி

இது குறித்து வன ஆர்வலர் மரைக்கா இத்ரீஸ்அகமது கூறியதாவது:-

அதிராம்பட்டினம் அலையாத்தி காட்டுக்கு குளிர்காலத்தில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து செல்லும். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகி்்ன்றன.

அதிராம்பட்டினம் அலையாத்திக் காடுகளை பொருத்தவரை கடலோர பகுதி என்பதால் பறவைகளுக்கு உணவு உட்கொள்ள அதிக அளவில் இரை கிடைக்கும். தற்போது வெயில் காலங்களில் நீர்நிலைகள் வற்றுவதால் முகாமிட்ட பறவைகள் திரும்பி செல்கின்றன. தமிழக அரசு அலையாத்திக் காட்டின் ஒரு மையப்பகுதியில் பெரிய அளவில் நீா்த்தேக்க தொட்டி அமைத்து கோடை காலத்தில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினாா.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments