ஆற்றாங்கரை கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் ஊராட்சி தலைவர் எஸ்.முகமது அலி ஜின்னா கோரிக்கை


ஆற்றாங்கரை கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் என ஊராட்சி தலைவர் எஸ்.முகமது அலி ஜின்னா துனை தலைவர் நூருல் அஃபான் கோரிக்கை வைத்துள்ளார்.

நலத்திட்ட பணிகள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு முகமது அலி ஜின்னா போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகிறார். இதுகுறித்து ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா கூறியதாவது, ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமமாக ஆற்றாங்கரை ஊராட்சி செயல்பட்டு வருகிறது.

இக்கிராமத்தில் அதிகமான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீனவர் குடும்பத்தில் பிறந்த நானும் இவர்களோடு ஒன்றிணைந்து கிராமத்திற்கு தேவையான அரசு நலத்திட்ட பணிகளை பெற்று ஊராட்சியை முன்மாதிரியான ஊராட்சியாக மாற்றிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்.

பாலம்

நான் பதவி ஏற்றது முதல் ஊராட்சியின் வளர்ச்சிக்கு என்னால் முடிந்த அளவு தேவையான அரசு நலத்திட்ட பணிகளை பெற்று குடிநீர் வசதி, தெருவிளக்கு அமைத்தல், பேவர்பிளாக் சாலைகள், மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து வருகிறேன். ஊராட்சியில் பிரமாண்டமான அளவில் புதிய ஊராட்சி செயலகம் கட்டிட அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுத்தந்து மீனவ மக்களின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார்.

ஆற்றாங்கரை-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் பாலம் அமைக்க அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். பாலம் அமைக்கப்பட்டால் ஆற்றாங்கரை மக்கள் சிரமமின்றி அன்றாட பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். மேலும் ராமேசுவரம் வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆற்றாங்கரை கிராமத்தில் உள்ள கருப்பணசுவாமி-ராக்கச்சி அம்மன் சாமிகளுக்கு பிரமாண்டமான அளவில் பொற்கோவிலாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த கோவிலின் அழகிய தோற்றத்தை காண்பதற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். இதனால் ஆற்றாங்கரை ஊராட்சியின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் மீனவர்கள் மீன்களை குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து செல்ல வசதியாகவும் இந்த பாலம் அமையும்.

சுற்றுலா தளம்

ஆற்றாங்கரை கிராமம் மேலும் வளர்ச்சி பெற காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் எங்கள் கிராம மீனவ மக்களின் நலனில் கருத்தில் கொண்டு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகிறார். மேலும் எங்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கே.நவாஸ் கனி எம்.பி. நிதியின் மூலம் புதிய ைஹமாஸ் விளக்கு அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளன. மண்டபம் யூனியன் தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஆணையாளர் ஆகியோரிடம் ஊராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கி புதிய சாலைகள், இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம், மத்திய அரசின் சிறுபான்மையினர் நல நிதியின் மூலம் ஆற்றாங்கரை கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக கொண்டு வருதல் உள்ளிட்ட கோரிக்கை வைக்கப்பட்டுள்ளன. மேலும் மீனவ மக்களின் நலன் கருதி ஊராட்சி வளர்ச்சிக்கு என்னால் முடிந்தளவு தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments