புத்துயிர் பெறும் தனுஷ்கோடி ரெயில் பாதை
வங்காளவிரிகுடா கடலின் பாக் ஜலசந்தியில் இருந்து பிரிந்து தனியாக காணப்படும் ராமேசுவரம் தீவின் தென்கிழக்கு முனையில் தனுஷ்கோடி உள்ளது.

இலங்கையின் தலைமன்னார் தீவுக்கு மேற்கே 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது சுற்றுலா தலம் மட்டுமின்றி, இலங்கையுடனான வர்த்தக தொடர்புக்கான துறைமுகமாகவும் செயல்பட்டது. வணிகத்துக்கான பொருட்கள் மட்டுமின்றி வியாபாரிகளும் தனுஷ்கோடியில் இருந்து படகு மூலம் இலங்கை சென்று வந்தனர்.

புயலால் அழிந்தது

1964-ல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி நகரம் அழிந்தது. மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் வீசிய சூறாவளி காற்று, மழையால், தனுஷ்கோடி கடல் அலைகள் 23 அடி உயரத்துக்கு மேலெழுந்து அந்த நகரத்தை உள்வாங்கியது.

இதில், தனுஷ்கோடி-பாம்பன் பாசஞ்சர் (வ.எண்.653) ரெயிலில் இருந்த பயணிகள் உள்பட ஏராளமானோர் உயிரிழந்தனர்.

மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலம் மூலம் ரெயில்கள் தனுஷ்கோடியை இணைத்தன. பாம்பன் பாலத்தில் இருந்து நேரடியாக ரெயில்கள் தனுஷ்கோடிக்கு மட்டுமே இயக்கப்பட்டன.

அதாவது, 1964 புயல் வரை சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு மீட்டர்கேஜ் ரெயில் பாதையில் போட்மெயில் என்ற பெயரில் ரெயில் இயக்கப்பட்டது. புயலுக்கு பிறகு பல ஆண்டு கடந்தாலும், மீண்டும் தனுஷ்ேகாடிக்கு ரெயில் பாதை என்பது ேபசும்பொருளாகத்தான் இருந்தது.

தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டம்

இந்தநிலையில், கடந்த 2003-ம் ஆண்டு தென்னக ரெயில்வே சார்பில் தனுஷ்கோடி-ராமேசுவரம் இடையே 17.28 கி.மீ. தொலைவுக்கு ரெயில்கள் இயக்க வசதியாக திட்டம் தயாரிக்கப்பட்டது. அதற்கு திட்டக்கமிஷன் கடந்த 2010-ம் ஆண்டு ஒப்புதல் கொடுத்தது.

இதுகுறித்த அறிவிப்பை 2011-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டின் போது, அப்போதைய ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். பின்னர் இந்த திட்டத்துக்கான நிதி கடந்த 2018-19 ஆண்டில் ரூ.208 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்த திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதியன்று அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து 2021-22 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் 2022-23 நிதியாண்டில் ரூ.59 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த திட்டநிதி விலைவாசி உயர்வு காரணமாக ரூ.746.56 கோடியாக உயர்ந்தது.

தற்போதைய பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ.385 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது, புதிய ரெயில்பாதை திட்டங்களில் தென்னக ரெயில்வேயில் தனுஷ்கோடிக்கு மட்டுமே இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது வரலாற்றில் முதல்முறையாகும். இந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் செலவழிக்காவிடில், இந்த நிதி வேறு திட்டத்துக்கு மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீடித்த இழுபறி

அதே நேரத்தில் ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டத்துக்கு 76.9 எக்டேர் நிலம் தேவைப்படுவதாக ரெயில்வே சர்வேயில் கணக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை கையகப்படுத்தி திட்டத்தை தொடங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

இதில் 3.66 எக்டேர் நிலம் தனியாருக்கு சொந்தமானது. 28.6 எக்டேர் நிலம் வனத்துறைக்கு சொந்தமானது. மீதமுள்ள 43.8 எக்டேர் நிலம் தமிழக அரசு பெயரில் இருந்து மீண்டும் ரெயில்வேக்கு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியதாகும்.

இந்த நிலத்தை பொறுத்தமட்டில், குறிப்பிட்டுள்ள நிலங்களில் பெரும்பகுதி ரெயில்வேக்கு சொந்தமானது. புயலின்போது தனுஷ்கோடி அழிந்த பின்னர், ரெயில்பாதை அமைக்கும் முயற்சி நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது. மீண்டும் அந்த பகுதியை மறுஉருவாக்கம் செய்யும் பணிக்காக அனைத்து நிலங்களையும் தமிழக அரசு தனது பெயரில் மாற்றிக்கொண்டது. இதில் ரெயில்வே நிலமும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. ஆனால், ரெயில்வே துறையின் ஒப்புதலின்றி ரெயில்வே நிலம் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்பும் தென்னக ரெயில்வே பொது மேலாளர் அலுவலகத்துக்கோ, மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்துக்கோ தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரெயில்வே சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இந்த திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தல் பணி தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில், பரமக்குடி-ராமேசுவரம் 4-வழிச்சாலை திட்டப் பணியில் மீன்பிடி பகுதிகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டது. இதற்கிடையே, இந்த பணிகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் மதுரை கோட்ட ரெயில்வே கட்டுமான பிரிவு இணைந்து கடந்த நவம்பர் மாதம், ரெயில் பாதை பணி மற்றும் 4 வழிச்சாலை பணியால் மீன்பிடி பகுதிகளுக்கு இடையூறு இல்லை என்று கூட்டு உறுதிமொழி சான்றிதழ் வழங்கின. ஏனெனில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணியை மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ள இருப்பதால் இந்த உறுதிமொழிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.

புத்துயிர் பெறுகிறது

பொதுவாக மாநில அரசு மற்றும் மத்திய அரசு மக்கள் நலனுக்காக மேற்கொள்ளும் திட்டப்பணிகளில் நிர்வாக ஒப்புதல் பெறுவது கட்டாயமாகும். அதன்படி, இந்த திட்டத்துக்கான நிலத்தை ஒப்படைப்பது குறித்த நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு கடந்த ஆகஸ்டு மாதம் வழங்கியது. இதில் தனியார் நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டு அந்த பணம் முழுவதுமாக தனியாருக்கு மதுரை கோட்ட ரெயில்வேயால் வழங்கப்பட்டு விட்டது.

இதற்காக சுமார் ரூ.65 லட்சம் இழப்பீட்டு தொகை தனியார் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அரசு நிலங்களுக்கான இழப்பீட்டு தொகையை பொறுத்தமட்டில் ரெயில்வேக்கு சொந்தமான நிலத்தை தவிர்த்து வருவாய்த்துறை கமிஷனர் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். ஆனால், ராமநாதபுரம் மாவட்ட நில ஒப்படைப்பு கோப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையே, வனத்துறைக்கு சொந்தமான நிலப்பகுதியை பொறுத்தமட்டில் மாவட்ட வன அலுவலரின் ஆய்வு முடிந்து ஸ்டேஜ்-1 கிளியரன்ஸ் உத்தரவு நிலுவையில் உள்ளது. இந்த உத்தரவு கிடைத்தவுடன், அடுத்தகட்டமான மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு கோப்பு அனுப்பி வைக்கப்படும். அமைச்சகம் ஒப்புதல் கொடுத்தவுடன் இந்த பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.

இதன் மூலம் நீண்ட காலத்துக்கு பின்னர், தனுஷ்கோடி ரெயில் பாதை திட்டம் புத்துயிர் பெற்று, சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடிக்கப்பட்டால், தமிழக அரசுக்கு சுற்றுலா பயணிகள் வருகை மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த பணிகள் விரைந்து நடக்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments